ஸ்னைப்பர் விசாரணையில் சிக்குவாரா நாலக சில்வா?


பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இருந்து காணாமல் போயுள்ளதாக கூறப்படும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கி தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிராக துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி.யின் உபபொலிஸ் தலைமையகத்தின் உயர் மட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில், காணாமல் போனதாக கூறப்படும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணை நடவடிக்கை ஒன்றின் போது கைப்பற்றப்பட்டது என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்தே அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சி.ஐ.டி. ஆரம்பித்துள்ளது.
அதன்படி குறித்த ஸ்னைப்பர் ரக துப்பாக்கியை கைப்பற்றிய விசாரணை நடவடிக்கையுடன் தொடர்புடைய பயங்கரவாத புலனயவுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், உப பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் மற்றும் ஒரு சார்ஜன் உள்ளிட்டோரிடம் வாக்கு மூலங்களை சி.ஐ.டி. பெற்றுக்கொண்டுள்ளதுடன் மேலும் பலரின் வாக்கு மூலங்களை பெறும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி குறித்த ஸ்னைப்பர் துப்பாக்கியை, வழக்குப் பொருளாக பதிவிடாமல் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாலக சில்வா தனது சொந்த தேவைக்காக பிரத்தியேகமாக பெற்றாரா எனும் சந்தேகம் விசாரணைகளில் எழுந்துள்ள நிலையிலேயே துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள் எதுவும் பொலிஸ் ஆயுத களஞ்சியத்தில் இருந்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்படவில்லை என்பது தெரியவந்ததை அடுத்து அது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, அண்மையில் ஒட்டு சுட்டான் பகுதியில் கிளேமோர் குண்டுடன் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் தப்பிச் சென்றிருந்த ' அத கொட்டா' எனும் புனைப் பெயரில் அறியப்பட்ட நபர் பின்னர் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சம்பூர் பகுதியில் உள்ள டேமியன் மாஸ்டர் என்பவரது வீட்டில் ஸ்னைப்பர் துப்பாக்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. டேமியன் மாஸ்டர் வீட்டை விட்டு தலை மறைவாகியுள்ள நிலையில் ஸ்னைப்பர் துப்பாக்கி கைப்பற்றப்பட்டு கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அந்த துப்பாக்கியே தற்போது காணாமல்போயுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே அது குறித்து தீவிர சி.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, ரி.ஐ.டி.க்குள் துணை இராணுவ படையை ஒத்த படையணியொன்றினை ஏற்படுத்த எடுத்த முயற்சி அதற்கான காரணம் தொடர்பிலும் விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. இப்படையணியை ஏற்படுத்த ரி.ஐ.டி.யில் தெரிவு செய்யப்பட்டோருக்கு எஸ்.ரி.எப். பயிற்சி வழங்க அவர் பொலிஸ் மாஅதிபரூடாக எஸ்.ரி.எப். கட்டளைத் தளபதியிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பிலேயே இவ்விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
இது குறித்த மேலதிக விசாரணைகள், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக, பிரதான பொலிஸ் பரிசோதகர் முனசிங்க உள்ளிடோர் கொண்ட குழுவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஸ்னைப்பர் விசாரணையில் சிக்குவாரா நாலக சில்வா? ஸ்னைப்பர் விசாரணையில் சிக்குவாரா நாலக சில்வா? Reviewed by NEWS on October 02, 2018 Rating: 5