ஒலுவில் கடலரிப்பு விவகாரம்: சபையில் எதிரும் புதிருமான கருத்துகள்

ஒலுவில் கடலரிப்பு மற்றும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பில், இரு வேறு கட்சி உறுப்பினா்கள், தத்தமது வாதங்களை முன்வைத்து, பிரதேச சபை அமா்வில், எதிரும் புதிருமுாக உரையாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வு, தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் நேற்று (15) நடைபெற்றது. 
  சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹம்சா, ஒலுவில் கடலரிப்பைத் தடுப்பதற்கு நிரந்தரமான தீர்வை வலியுறுத்தி, பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டுமென, தவிசாளிரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் தமீம் ஆப்தீன், துறைமுகத்தில் குவிந்துள்ள மணலை அகற்றி, மீனவர்களினது வாழ்வாதாரத்தை வழங்குவதற்கும் இச்சபையில் பிரேரணையொன்றை நிறைவேற்றுமாறு, தனது கோரிக்கையை முன்வைத்தார்.
ஒலுவில் பிரதேச கடலரிப்பைத் தடுப்பதற்கு உடன் நடவடிக்கை அவசியம் ஏற்பட்டுள்ள அதேவேளை, மீனவர்களது பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட வேண்டுமென, தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, இதன்போது தெரிவித்தார்.
சபையில் தவிசாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“துறைமுக நிர்மாணத்தின் பின்னர் ஒலுவில் கடற்கரைப் பிரதேசத்தில் சுமார் 3,000 தென்னை மரங்கள் அழிந்துள்ளன. மேலும், பன் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்து போயுள்ளன.
“நிந்தவுர், அட்டப்பள்ளம் ஆகிய பிரதேசங்களில் 650 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கைக் காணிகள் உவர்த் தன்மை அடைந்து, பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத அவல நிலை தோன்றியுள்ளதுடன், 5,000 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள், தமது வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளமையால், பெரும் சாபக்கேடாகவே, இத்துறைமுகம் காணப்படுகின்றது.
 “துறைமுகம் அமைக்கப்படுவது, நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிப்பதற்கும், மக்களுக்கான தொழில் முயற்சிகள், வேலை வாய்ப்புகள் எனப் பல நன்மைகளை அது கொண்டுவர வேண்டும்.
“ஆனால், ஒலுவில் துறைமுகத்தால் அழிவைத் தவிர அவ்வாறு எதுவும்  அங்கு இடம்பெறவில்லை என்பதே உண்மையான விடயமாகும்.
“இங்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்டவசமான செயற்பாட்டால் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு ஒலுவில் மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்களது இருப்பும், பாதுகாப்பும் இன்று கேள்விக்குட்படுத்தப்பட்டிருப்பதை அனைவரும் மனிதநேயத்துடன் நோக்க வேண்டும்.
 “இப்பாரிய பிரச்சினையை அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உரிய அமைச்சுடன் பேசி, நிரந்தரமான தீர்வொன்றுக்கு அவசரமாக வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” என்றார்.
 இதேவேளை, ஒலுவில் பிரதேச மக்களுக்கும், மீனவர்களுக்குமிடையில் புரிந்துணர்வு பேச்சுவார்த்தை ஏற்படுத்தப்படாமல், இரு தரப்பினரையும் மோதலுக்கான சூழ்நிலையை அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளனரென, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.அமீன் சபையில் குற்றஞ்சாட்டினார்.  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...