பூஜித மீது அமைச்சரவையில் ஜனாதிபதி கடும் விமர்சனம்

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்துள்ளார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் (02) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் கோமாளித்தனமாக அமைந்துள்ளதுடன் அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்குள் உள்ளாக்கி வருகின்றது. 
அவரது செயற்பாடுகள் ஜனாதிபதியான என்னை தர்மசங்கடத்திற்குள் உள்ளாக்கியுள்ளது. அதேபோன்று நானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளோம்.
மேலும் இத்தகைய நிலைமை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. பொலிஸாரது நடவடிக்கைகள் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொல்வதற்கு சதி இடம்பெற்றதாக தகவல்கள் வெ ளியாகியுள்ளதுடன் அந்த விடயத்தில் குற்றஞ்சாட்டப்படும் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவுடன் பொலிஸ் மா அதிபர் நட்புறவைக் கொண்டிருந்ததாக குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வுப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் பொலிஸ் மா அதிபரிடமும் வாக்கு மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபர் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...