மகிந்தவுடன் கைகோர்க்கவுள்ள ரிஷாட், ஹகீம்!

"கூட்டரசில் பங்காளியாகவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணி உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்குமானால் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிஸ் ஆகியவற்றின் உதவியுடன் அரசுக்கு எதிராக இறுதி ஆட்டத்தை ஆரம்பிக்க நான் தயாராகவே இருக்கின்றேன்.” இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட அணியிடம் எடுத்துரைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

கூட்டரசிலிருந்து வெளியேறி பொது எதிரணியுடன் கைகோத்துள்ள சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட அணியிலுள்ள முக்கிய உறுப்பினர்களை சிலர் நேற்று முன்தினம் இரவு மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளனர்.

வரவு - செலவுத்திட்டம் முன்வைக்கப்படவுள்ளதால், அதை ஓர் துருப்பாக பயன்படுத்தி குறைந்தபட்சம் பிரதமர் பதவியையாவது கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்ற யோசனையை மஹிந்தவிடம் எத்திவைத்துள்ளனர். இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதற்குப் பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட போதும் இறுதி நேரத்தில் பொது எதிரணியின் காலைவாரும் வகையில் அரசு பக்கமுள்ள சுதந்திரக் கட்சி அணி செயற்பட்டது.

எனவே, முதலில் மைத்திரி பக்கமுள்ள அணியின் ஆதரவைப் பெறுங்கள். அது உறுதியாக கிடைக்குமா என்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள். அதன்பின்னர் பிரதமரை மாற்றியமைக்கும் உங்கள் இறுதி முயற்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின ஆதரவை, அக்கட்சி உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தி நான் பெற்றுத் தருகின்றேன். பொது எதிரணியின் ஆதரவு என்றும் இருக்கும்" என்றார்.

இதையடுத்து ஜனாதிபதி மைத்திரியுடன் பேச்சு நடத்திவிட்டு மீண்டும் சந்திப்பதாக மஹிந்தவிடம் கூறிவிட்டு சு.கவின் 15 பேர் கொண்ட அணி உறுப்பினர்கள் புறப்பட்டுள்ளனர் இந்தத் தகவலை பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...