"பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு செல்ல ஜனாதிபதிக்கு முடியும்"

நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலுக்கு சென்று யாருக்கு ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் 70ஆவது ஷரத்தின்படி பாராளுமன்றம் நான்கரை வருடங்களின் பின்னரே கலைக்கப்பட முடியும் என்று திருத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் வேண்டும்.
அத்துடன், ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை உடையவர் என்று கூறும் 33வது ஷரத்து ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டும், ஒத்திவைக்கும் மற்றும் கலைக்கும் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
19 வது திருத்தச் சட்டத்தின் கீழ் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் 2002 இல் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி கலைக்க முடியாது என்ற வகையில் அறிமுகப்படுத்திய திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பாராளுமன்ற கலைப்பு என்பது எப்போதுமே நிறைவேற்று அதிகாரமாக இருந்துள்ளது. அதனை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி இல்லாமலாக்க முடியாது.
எனவே 33வது ஷரத்து தற்போதைய 19வது திருத்த சட்டத்தில் உள்ளடக்க வேண்டியதாயிற்று. அல்லாவிட்டால் 19ஆவது திருத்த சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்பட்டிருக்கும்.
ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இருக்கிறது. அது தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே அதனை பயன்படுத்த வேண்டும். அது மக்களுக்கும் நாட்டுக்கும் தேவைப்படும் போது, ஸ்திரமற்ற நிலையில் உள்ள பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் ஊடகமொன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் முன்னாள் பிரதம நீதியரசர் கூறியுள்ளார்.
"பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு செல்ல ஜனாதிபதிக்கு முடியும்" "பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு செல்ல ஜனாதிபதிக்கு முடியும்" Reviewed by Ceylon Muslim on November 07, 2018 Rating: 5