சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள், கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரியின் 12வது கற்கை நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த முப்படையினருக்கான பட்டமளிப்பு விழா முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (12) முற்பகல் அக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட முப்படை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் தொழில்சார் அறிவை மேம்படுத்துதல் மற்றும் அவர்கள் தமது அலுவலகங்களில் கட்டளைகளைப் பிறப்பிக்கத்தக்க பதவிநிலை தரத்திற்கான பயிற்சிகள் இந்த கல்லூரியின் ஊடாக வழங்கப்படுவதுடன், நாட்டில் முப்படையினருக்கான கற்கை நெறிகளை நடத்தும் நிறுவனங்களுக்கிடையே பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தொழில் ரீதியான உயர்கல்வியையும், தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சிகளையும், முப்படையினரின் உயர் பதவிகளுக்கு உரிய கடமை ரீதியான பயிற்சிகளையும் வழங்கும் முதன்மை நிறுவனமாக இக்கல்லூரி செயற்பட்டு வருகின்றது.
68 இராணுவத்தினர், 27 கப்பற் படையினர், 27விமானப்படையினர், 14 வெளிநாட்டு மாணவர்கள் உள்ளிட்ட 136 முப்படை அதிகாரிகள் இம்முறை பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்திசெய்து பட்ட சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்தியா, இந்தோனேசியா, ஐக்கிய அமெரிக்கா, சீனா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, ருவண்டா மற்றும் பீஜி ஆகிய 10 நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் 14 வெளிநாட்டு அதிகாரிகள் இந்த பாட நெறியை இன்று வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளனர்.
இன்று முற்பகல் சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள், கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரிக்கு விஜயம் செய்த முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகுந்த அபிமானத்துடன் வரவேற்கப்பட்டார்.
கற்கை நெறியின்போது சிறப்பான திறமைகளை வெளிக்காட்டிய முப்படை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டதுடன், சிறந்த ஆராய்ச்சி நூல்களுக்கான விருதினையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார்.
இங்கு பயிற்சி பெறும் முப்படை அதிகாரிகளின் அறிவாற்றல்களை விரிவுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன்கூடிய நூலகத்தையும் இன்று ஜனாதிபதி திறந்து வைத்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முப்படைகளின் தளபதிகள், முன்னாள் இராணுவ தளபதிகள், இராஜதந்திர இராணுவ உறுப்பினர்கள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பட்டம் பெற்ற முப்படை அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடக பிரிவு)
ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா!
December 12, 2018
1 minute read
Share to other apps