புதன்கிழமை புதிய அமைச்சரவை..?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவை நாளைமறுதினம் புதன்கிழமை பதவியேற்கும் எனத் தெரியவருகின்றது.

உறுதிப்படுத்தப்பட்ட அமைச்சரவைப் பட்டியலை இறுதிநேரத்தில் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாலேயே இன்று நடைபெறவிருந்த பதவியேற்கும் நிகழ்வு புதன்வரை பிற்போடப்பட்டுள்ளது.அதேவேளை, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணனுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.

இதன்படி மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துவிவகார அமைச்சு அவரிடம் கையளிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கை மையப்படுத்திய குறித்த அமைச்சுப் பதவி சுவாமிநாதன் வசமிருப்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை. பிரதமர் ரணிலிடம் , சம்பந்தன் இதை நேற்றுமுன்தினம் நேரில் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே இந்த மாற்றம் இடம்பெறவுள்ளது.

எனினும், சுவாமிநாதனுக்குப் பிறிதொரு அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் எனவும், அதனுடன் இந்துவிவகார அமைச்சும் இணைக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியாட்சி அமையும் பட்சத்தில் , அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதால் சுவாமிநாதனுக்கு ‘வெட்டு’ விழலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
புதன்கிழமை புதிய அமைச்சரவை..? புதன்கிழமை புதிய அமைச்சரவை..? Reviewed by NEWS on December 17, 2018 Rating: 5