சிறுபான்மை கட்சிகளின் கூட்டு : ஹக்கீமின் செயற்பட்டை வரவேற்கின்றேன் - மனோ

சிறுபான்மைக் கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ள கருத்தினை தான் வரவேற்கிறேன் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவத்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது, 

தமிழ் கட்சிகளின், தமிழ் பேசும் கட்சிகளின் பாராளுமன் உறுப்பினர்கள் கட்டம் கட்டமாக ஒன்றாக அமரும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இரண்டு வருடங்களுக்கு முன்போ கூறியிருந்தேன். அதனை இந் நாட்டு தமிழ் பேசும் மக்கள் அறிவார்கள். அது அப்போது பல காரணங்களால் நிறைவேறவில்லை.

இப்போது ஜனாதிபதி மைத்திரிபாலவின் குளறுபடிகள் காரணமாக அந்த யோசனை கூடிவரும் காலம் கனிந்துள்ளது. இன்றைய தேசிய நெருக்கடியில் சிறுபான்மை கட்சிகள் காத்திரமாக பணியாற்றியதை தமிழ், முஸ்லிம் மக்கள் அறிவார்கள்.

சிறுபான்மை கட்சிகளின் கூட்டு முயற்சி தேசிய நலன்களை அடிப்படையாக கொண்டதாகும் என்பதையும், இது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதையும் நாம் உரக்க எடுத்து கூறவேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் நியாயமான அரசியல் மற்றும் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தர சிங்கள கட்சி தலைவர்கள் தவறிவிட்டார்கள் என்பதை சிங்கள மக்கள் இன்று அறியாமல் இல்லை. எனவே எமது முயற்சியை சிங்கள மக்களும் புரிந்துக்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.

சிறுபான்மை கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என்ற கருத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து தேர்தல் கூட்டாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகள் அவ்வந்த கட்சிகளை பொறுத்தவை ஆகும். நான் இங்கே குறிப்பிடுவது கூட்டு செயற்பாடுகளையே ஆகும் என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...