அட்டாளைச்சேனையில் UNP கொண்டாட்டம்நீதித்துறையினூடாக ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு, அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நாளை நாடும் முழுசர்வதேசமும் ஒரு போதும் மறந்து விடாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான யூ.கே. ஆதம்லெப்பபை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு தவறானது என நேற்று மாலை உயர் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்ட தீர்ப்பினை அடுத்து அட்டாளைச்சேனை உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் நேற்றிரவு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களினால் மகிழ்ச்சி தெரிவித்து நடத்தப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த காலத்திற்கு முன்னர் ஒரு குழுவினரின் அரசியல் இலாபங்களுக்காக மாத்திரம் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சி தவறானதும், அரசியலமைப்புக்கு முறனானதுமாகும். இதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளிக்காமல் அரசியலமைப்புக்கு உட்பட்டு எந்தவித பக்கசார்புமின்றி வழங்கியுள்ள தீர்ப்பானது வாக்களித்த மக்களுக்கும், சட்டத்திற்கும், நீதிக்கும் கிடைத்த வெற்றியும், கௌரவமாகவே கருத வேண்டும். 

கடந்த பொதுத் தேர்தலின் போது ஐந்து வருடங்களுக்காகவே ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் வாக்களித்திருந்தனர். இக்காலப்பகுதி முடிவடைவதற்குள் அரசியல் அராஜகம் அரங்கேற்றப்பட்டு கடந்த 50 நாட்களாக நாட்டை ஸ்தம்பித நிலைக்கு உட்படுத்தி இருந்தனர். இவற்றுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பொறுப்பெடுக்கவுள்ளது.

ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட முடிவுகள் தவறானது என்பதை உணர்ந்து கொண்டு இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை சுமூகமாக தீர்த்து வைப்பதற்கும், அரசியல் மரபுகள், நடைமுறைகளை நாகரீகமான முறையில் வழிநடத்துவதற்கும் ஜனாதிபதி முன்வர வேண்டும் என்றார்.
அட்டாளைச்சேனையில் UNP கொண்டாட்டம் அட்டாளைச்சேனையில் UNP கொண்டாட்டம் Reviewed by NEWS on December 14, 2018 Rating: 5