வடக்கு துரித அபிவிருதியிற்கு 2000 மில்லியன் ஒதுக்கீடு ; அமைச்சரவை அங்கீகாரம் !

வடக்கில் பொருளாதார அடிப்படை வசதி ,சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு மற்றும் சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற நான்கு துறைகள் ஊடாக வடக்கில் துரித அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்படி யோசனையை முன்வைத்தார்.


மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அபிவிருத்தி கைவிடப்பட்டிருந்ததினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அடிப்படை வசதி மற்றும் சமூக அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதார நிவாரணத்தை வழங்கி அந்த பிரதேச அபிவிருத்தியை துரிதப்படுத்தும் பொருட்டு விசேட திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இதற்கமைவாக விவசாயம், கைத்தொழில், கடற்றொழில் மற்றும் சேவைத் துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இவற்றின் கீழான வேலைத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும்.


கிராமப் புற வீதிகள் தீவுகளில் வள்ளங்களுக்கான நங்கூரமிடும் இடங்கள் மற்றும் தரைப்பகுதிகளில் ஜெட் தீவுகள் மற்றும் பிரதான தரைநிலங்களுக்கிடையில் பிரவேசத்திற்கான வசதிகளை வழங்குதல், விவசாய உபகரணங்கள் விவசாயக் கிணறுகள் மீன்பிடி வள்ளங்கள் மற்றும் என்ஜின்கள், சுயதொழில் வாய்ப்புடன் தொடர்புபட்ட உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் சந்தை வசதிகள், களஞ்சியம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அடிப்படை வசதிகள் போன்ற வாழ்வாதார மற்றும் தொடர்புபட்ட ஏனைய வசதிகள் இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.


இதற்கமைவாக பொருளாதார அடிப்படை வசதி, சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு மற்றும் சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற 4 துறைகள் ஊடாக இந்த திட்டம் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தேசியக் கொள்கை பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அபிவிருத்தி அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்