Jan 18, 2019

பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை 6618 ஆல் அதிகரிப்பு!

சப்ரகமு பல்கலைக்கழக மருத்துவபீட திறப்பு விழாவில் அமைச்சர் ஹக்கீம்.

பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை 6618 ஆல் அதிகரித்துள்ளோம். உயர்கல்வி அமைச்சினை நான் பொறுப்பேற்கும் போது 24540 என்ற எண்ணிக்கையான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதியை பெற்றனர். இப்போது அதனை 31158 ஆக அதிகரிக்க செய்துள்ளோம். உயர் கல்வித்துறையில் இந்த நான்கு வருட காலத்திற்குள் பொன்னான ஒரு யுகத்தை உருவாக்கி அதன் வளர்ச்சிக்காக மட்டும் 60 பில்லியன் அதாவது 60,000 மில்லியனை இந்த அரசு செலவிட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் திறப்புவிழா வியாழக்கிழமை (17) பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையில் குருவிட்ட ஏதன்டவல பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் 

உயர்கல்வித்துறையில் பெரும் மாற்றத்தினை நாம் ஏற்படுத்தியுள்ளோம். பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை 6618 ஆல் அதிகரித்துள்ளோம். உயர்கல்வி அமைச்சினை நான் பொறுப்பேற்கும் போது 24540 என்ற எண்ணிக்கையிலிருந்து 31158 ஆக இப்போது அதிகரிக்க செய்துள்ளோம். இது கல்வித்துறையில் இந்நாடு அடைந்து வருகின்ற வெற்றிக்கு சான்றாகும். இது மாற்றத்திற்குரிய யுகம் என நான் குறிப்பிட்டது இதனால் தான். இவ்வாறே பலக்லைக்கழக மாணவர்களுக்கான தேவையான வளங்களையும், விரிவுரையாளர்களையும் எம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. அதேபோல 16 கற்கை நெறிகளுக்கான புதிய பீடங்களை 4 வருடங்களுக்குள் எம்மால் நிறுவ முடிந்தது.

பல்கலைக்கழக பட்டம் பற்றிய தகமை சான்றுகளில் காணப்படும் சீர்கேடுகளை களைய புதிய ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கான அமைச்சுப்பத்திரத்தை இம்மாதம் சமர்ப்பிக்கவுள்ளேன். அதன் மூலம் சர்வதேச தரத்திற்கு எமது தகைமைகளையும் தரமுயர்த்த முடியும். பட்டதாரிகளுக்கும், தொழில் சந்தைக்குமிடையிலே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை களையவும் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளோம். இதன் மூலம் எமது உயர் கல்வித்துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீதி அமைச்சர் தலதா அத்துகோரல,சப்ரகமுவ பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கம்புறுக்கமுவே வஜிர, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், இராஜாங்க அமைச்சர் கருனாரத்ன பரணவிதாரன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஏ.விஜயதுங்க, சேஷா விதானகே, பேராசிரியர் சுனில் சாந்த, அமைச்சின் செயலாளர் எம்.எம்.ஜி.மாயாதுன்ன உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வுக்கு முன்னர் இரத்தினபுரி பொது வைத்தியசாலையானது பிரஸ்தாப மருத்துவ பீடத்தின் போதனா வைத்தியசாலையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களினால் தரமுயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network