ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் - கோத்தாபய

ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடாத்தப்பட்டால் தான் அத்தேர்தலில் அபேட்சகரக போட்டியிடத் தயாரென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ நேற்று அறிவித்தார்.

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ உள்ளிட்ட 7 சந்தேக நபர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று விஷேட நீதிமன்றில் இடம்பெற்றது. அவ்வழக்கில் ஆஜராகிவிட்டுத் திரும்பும்போது அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தை உறுதிசெய்தார். அத்துடன் தான் அமெரிக்கப் பிரஜா உரிமையை ரத்துசெய்ய எந்த சிக்கல்களும் இல்லை எனவும், அதனால் அதனை வைத்திருப்பதும் ரத்து செய்வதும் தனது தனிப்பட்ட உரிமை எனவும் இதன்போது கோத்தாபய ராஜபக் ஷ கூறினார்.

கோத்தாபய ராஜபக் ஷ வழக்கின் பின்னர் நீதிமன்றிலிருந்து வெளியே வந்ததும் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர். முதலில் அமெரிக்க பிரஜா உரிமையை ரத்து செய்வதில் உங்களுக்கு சிக்கலுள்ளதாகக் கூறப்படுகின்றதே அப்படியானால் எப்படி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமென ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கோத்தாபய ராஜபக் ஷ,

“அந்தக் குடியுரிமை நான் தனிப்பட்ட ரீதியில் பெற்றுக்கொண்டது. அதனை ரத்து செய்வதில் எந்த சிக்கல்களும் இல்லை. அது எனது தனிப்பட்ட விடயம். ரத்து செய்யவும் முடியும், அவ்வாறே வைத்திருக்கவும் முடியும். சட்டத்தில் அதனை ரத்து செய்ய முடியாதென எங்கும் இல்லை.

அது எனது தனிப்பட்ட உரிமை. ஒருவரை குடியுரிமையை அகற்ற முடியாதெனக் கூறி கட்டிப்போட முடியாது. அமெரிக்கா என்பது, அவர்களது கூற்றுக்கமைய அவர்கள் ஜனநாயகத்தின் தந்தை. அவ்வாறெனில் அவர்களால் ஒருவரின் உரிமைகளை கட்டிப்போட்டு வைக்க முடியுமா? அது முடியாது தானே” என்றார்.

இதன்போது ஊடகவியலாளர்கள், மக்கள் உங்களை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு அழைக்கும்போது ஏன் நீங்கள் அதற்கு பதிலளிப்பதிலிருந்து ஒதுங்குகின்றீர்கள் என வினவினர்.

இதன்போது பலத்த சிரிப்புடன் பதிலளித்த கோத்தாபய ராஜபக் ஷ, நான் ஏற்கனவே அறிவித்தேன் ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கத் தயார் என்று கூறிக்கொண்டே தனது வாகனத்திலேறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...