தென்கிழக்குப் பல்கலையில் வரலாற்று நிகழ்வு!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை செதுக்கிய சிற்பிகளில் முதன்மையானவர்களில் ஒருவரான அப்பல்கலைக்கழகத்தின் முதல் உபவேந்தர் பெறுமதிமிக்க சமூக ஆர்வலர், பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்களின் பதிப்பில் டாக்டர் எம்.எம்.மீராலெப்பை அவர்கள் எழுதிய‘சம்மாந்துறை சரித்திரம்’ எனும், இலங்கை முஸ்லிம்களின் குறிப்பாக சம்மாந்துறை மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் துல்லியமாக எடுத்துக்கூறும் நூல் வெளியீட்டு விழா 2018.12.31 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட கலை அரங்கில் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் மேன்பாட்டு மையத்தின் தலைவர் கலாநிதி றமீஸ் அபூபக்கரின் வழிகாட்டுதலில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி, கலாநிதி எம்.எல்.பௌசுல் அமீர் தலைமையில் இடம்பெற்ற குறித்த வராலாற்று நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் கலந்துகொண்டார்.

‘சம்மாந்துறை சரித்திரம்’ எனும் நூலின் அறிமுக உரையை மட்டுமல்லாது நூலின் பதிப்பாசிரியரான பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்கள் பல்கலைக்கழகத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றியுள்ள பணிகள் பற்றி பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அவர்கள் அச்சொட்டாக எடுத்துரைத்தார்.

நூல் பற்றிய நயவுரையை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.ரகுபரன் நிகழ்த்திய அதேவேளை நிறைவுரையை பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் நிகழ்த்தினார். இதில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றியும் அதில் சம்மாந்துறையின் வகிபாகம் பற்றியும் எடுத்துக்கூறியதுடன் தொன்கிழக்குப் பல்கலைக்கழகம் பற்றியும் அதன் தோற்றம் பற்றியும் பிரதேசம் தொடர்பில் அது கைக்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும், மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய பணிகள் தொடர்பிலும், தற்போதைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உயர் கல்வி அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் மறைந்த தலைவரின் கனவுகளில் ஒன்றான தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் நீண்டதொரு உரையை நிகழ்த்தினார்.

   நிகழ்வில் ‘சம்மாந்துறை சரித்திரம்’ நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்களுக்கு பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் பொன்னாடை போர்த்தியதுடன் பிரதம அதிதி உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்களால் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறையின் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸிலின் நன்றியுரையுடன் நிறைவுற்ற குறித்த நிகழ்வுக்கு அரசியல் பிரமுகர்கள் பேராசிரியர்கள் கலாநிதிகள் கல்வியாளர்கள் சமூக தலைவர்கள் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.


-எம்.வை.அமீர்,யூ.கே.காலித்தீன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...