மாகாண சபைத் தேர்தல்: கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் கிழக்கின் முன்னாள் முதல்வர்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் நடத்துவதற்கு பிரதான கட்சிகள் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளமையை அடுத்து ஒரு மாத காலத்துக்குள் இதற்குரிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பின்புல அழுத்தத்தோடு இந்தச் சட்டமூலத்தைக் கொண்டு வரும் நடவடிக்கை அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
நீண்ட மௌனத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்குப் பிரதிநிதிகள் மௌனம் கலைத்திருப்பது பாராட்டுக்குரியது.
ஐனநாயக ஆட்சி முறைமையின்றி வடக்கு, கிழக்கு மக்கள் தமது தேவைகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலை ஆண்டுக்கணக்கில் தொடர்வதற்கு ஐனநாயகத்தை விரும்பும் சக்திகள் இனிமேலும் இடமளிக்கக்கூடாது.
தற்போதைய நிலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்க அம்சமாகும்.
இதனைக் கருத்தில்கொண்டு அனைத்துத் தரப்பினரும் இணைந்து வெகுவிரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்வர வேண்டும் எம்பதே எமது நிலைப்பாடாகும்.
இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முழுமையான அழுத்தங்களை அரசுக்குக் கொடுத்து வருகின்றது.
குறிப்பாக நமது தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றமையும் பாராட்டுக்குரியது. தொடர்ந்தும் ஆளுநர்களின் பிடியில் மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரம் இருக்கக்கூடாது என்பதே ஐனநாயகத்தை விரும்பும் மக்களின் எதிர்பார்ப்பாகும்” – என்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்