Jan 30, 2019

மு கா வுக்கு முடிவுகட்ட - மு கா வே முயற்சியா?

 
வை எல் எஸ் ஹமீட்

தற்போதைய யாப்பின் படி பாராளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை இருப்பதாக ஜனாதிபதி கருதுகிறாரோ அவரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார். அவருக்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லை. எதிர்க்கட்சி விரும்பினால் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரலாம். அது சாதாரண பெரும்பான்மையால் ( சமூகமளித்திருப்பவர்களில் பாதியும் ஒன்றும் ) நிறைவேற்றப்பட்டால் பிரதமர் பதவியிழப்பார்; என்பது எல்லோருக்கும் தெரியும்.

புதிய நகல்யாப்பிலும் இதேமுறைதான் பிரேரிக்கப்பட்டிருக்கின்றது; ஆனால் சிறிய வித்தியாசம். அதாவது அவ்வாறு பிரதமர் நியமிக்கப்பட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடாத்த வேண்டும். அதில் அவ்வாறு நியமிக்கப்பட்ட பிரதமர் தோல்வியடைந்தால் பாராளுமன்றம் புதிய பிரதமரைத் தெரிவு செய்யும். ஆனால் ஒரு கட்சி 50% இற்குமேல் ஆசனங்களைப்பெற்றால் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லை . இதில் பிரச்சினை ஏதும் இல்லை.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு
—————————————-
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தற்போது தேவை சாதாரண பெரும்பான்மை. அதாவது 100பேர் சமூகமளித்தால் 51 பேர். நகல் யாப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற 113 தேவை. ( சரத்து 89) ( அதாவது புதிய தேர்தல் முறையில் மொத்தம் 233. தேவை 117). சிறுபான்மைக் கட்சிகளுக்கு முன்னயதைவிட சற்று அனுகூலம் குறைவு. ஆனாலும் பெரிய பிரச்சினை இல்லை. ஏனெனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும்போது பெரும்பாலும் எல்லோரும் சமூகமளித்திருப்பார்கள்.

இங்குதான் மு கா பெரும் ஆச்சரியத்தை நிகழ்த்தியிருக்கின்றது.

அதாவது, இந்த ஏற்பாட்டை ( சரத்து 89 ஐ) ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமரை நீக்குவதற்கு 2/3 ஐத் தேவையாக்க வேண்டும்; என்று வழிநடாத்தல் குழுவுக்கு மு கா பிரேரித்திருக்கின்றது. ( இது நிபுணர் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது)
ஆளுங்கட்சிக்கே பெரும்பாலும் 2/3 பெறுவது கஷ்டம். எதிர்க்கட்சியால் பெறமுடியுமா?

இன்று ஆட்சிசெய்வதற்கு 113 தேவை. தற்போதைய தேர்தல்முறையின்கீழ் பெரும்பாலும் 113 பெறுவது சிரமம் என்பதனால்தான் சிறுபான்மைக் கட்சிகளின் தயவு தேவைப்படுகிறது. அதை வைத்துத்தான் சாதிக்கத்தெரிந்த சிறுபான்மைக்கட்சிகள் சாதிக்கின்றன. உதாரணம் த தே கூ.

இவர்களின் பிரேரணையின்படி பிரதமராவதற்கு 113ஐப் பெறாவிட்டால் சிறுபான்மைக் கட்சிகளின் தயவு தேவை. பிரதமராகிவிட்டால் அதன்பின் ஆட்சியைத் தொடருவதற்கு சிறுபான்மைக் கட்சிகளின் தயவு தேவையேயில்லை. ஏனெனில் ஒன்று, இரண்டு சிறுபான்மைக் கட்சிகள் அரசிலிருந்து விலகினாலும் எதிர்க்கட்சி 2/3 பெறாது. அதன்பொருள் ஒருவர் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டுவிட்டால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவரை அசைக்கமுடியாது.

சற்று சிந்தித்துப்பாருங்கள். தற்போது தேவை சாதாரண பெரும்பான்மை. நாளை எதிர்க்கட்சி ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால் த தே கூ நடுநிலை வகித்தால் கூட ஆட்சி கவிழலாம். அல்லது இரண்டு முஸ்லிம் கட்சிகளும் மாறி வாக்களித்தாலும்/ நடுநிலை வகித்தாலும் கவிழலாம். சுக்கான் நமது கையில் இருக்கின்றது. அதைப் பாவிக்கத்தெரியாமல் இருப்பது நமது பலவீனம். அது வேறுவிடயம்.

புதிய முறையில் நடுநிலை வகித்தால் கவிழாது. எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

இவர்களின் பிரேரணையின் படி நடுநிலை வகித்தாலும் கவிழ்க்க முடியாது, எதிர்த்து வாக்களித்தாலும் கவிழ்க்க முடியாது.

சிந்தித்துப்பாருங்கள். நாளை மஹிந்தவுடன் இணைந்து நமது 12 பேரும் வாக்களித்தாலும் 150 வருமா? த தே கூ ம் சேர்ந்து வாக்களித்தாலும் 150 வராது. இதன்பொருள் என்ன?

ஏற்கனவே முட்டுக்கொடுத்தும் எதையும் சாதிக்கவில்லை. இப்பொழுது பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டதும் எட்டி உதைத்தாலும் கை கட்டி வாய்பொத்தி ஓரத்தில் போய்க் குந்தவேண்டியதுதான் அமைச்சுப் பதவிக்காக. சமூகத்திற்காக அரசை எதிர்த்துப்பேசினால் சிலவேளை அந்த நிலைமை வரலாம். அப்பொழுது அமைச்சு, ராஜாங்க அமைச்சு, பிரதியமைச்சு என மூச்சுவிடுபவர்கள் ஒவ்வொருவராக வேலி பாய்வார்கள். அதன்பின் கட்சியை மூடவேண்டியதுதான்.

இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியில் இருந்து குரல்கொடுக்க மட்டும்தான் முடியும். தமிழர்களை ஆயுதப்போராட்டத்திற்குள் தள்ளியதே வெறும் நூறுவீத முரண்பாட்டு அரசியல்தான்.

சுருங்கக்கூறின் பிரதமராகும்வரை நாம் தேவைப்படுவோம். அதுவும் இந்தத் தேர்தல்முறை இருந்தால்தான். அதன்பின் நாம் தேவையில்லை. நாம் செல்லாக்காசு.

இந்தப் பிரேரணையை மு கா ஏன் முன்வைத்தது? இனி மு கா தேவையில்லை. ஐ தே கட்சியுடன் சங்கமமாகிவிடுவோம்; என்றா?

அல்லது; பலம் இருந்தும் நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை. அந்தப்பலம் எதற்கு என்பதற்காகவா? அடிமைகளாகவே இருந்துவிட்டுப் போவோம் என்பதற்காகவா? அல்லது புரியாத்தனமா? அல்லது வேறு ஏதும் பின்னணியா? புரியவில்லை.

அங்கத்தவர்களே! ஆதரவாளர்களே! இது ஏன் என்றாவது உங்கள் தலைமையிடம் கேள்வியெழுப்புவீர்களா?

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network