புதிய அரசியலைப்பு தொடர்பில் மு.காவின் நிலைப்பாடு என்ன? வாய்திறக்குமா?

முஸ்லிம் புத்திஜீவிகள் ஒன்றியம் கேள்வி 


நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை முஸ்லிம் மக்களுக்கு அவசரமாக தெளிவுபடுத்த வேண்டும் என முஸ்லிம் புத்திஜீவிகள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்த புதிய வரைவில் சமஷ்டிக்கான பல அம்சங்கள் இருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், புதிய அரசியலமைப்பின் சூத்திரதாரியுமான சுமந்திரன் எம்.பி கூறியிருக்கும் நிலையிலும், வடக்கு-கிழக்கை இணைப்பதற்கு கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் மட்டும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ள நிலையிலும், இவ்வாறான அம்சங்கள் வடக்கு- கிழக்கு முஸ்லிம்களுக்கு ஏற்புடையதா?எனவும் அதனால் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளுக்கு பயன் உண்டா என்பதையும் முஸ்லிம் காங்கிரஸ் உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அந்த ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம்காங்கிரஸின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன? இவ்வாறான நகலொன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் கூட இன்னும் மதில்மேல் பூனையாகத்தானா அந்த கட்சி இருக்கப்போகின்றது.?

தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக முஸ்லிம்கள் நிற்கக்கூடாது என்று அடிக்கடி கூறும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் , முஸ்லிம்களின் அபிலாசைகள் தொடர்பில் என்ன திட்டங்களை முன்மொழிந்துள்ளார்? இந்த விடயத்தில் முஸ்லிம் சிவில் சமூகத்துடன் ஒருங்கிணைந்து எதிர்காலத்தில் ஏதாவது முயற்சிகளை மெற்கொள்ள திட்டமிட்டுள்ளாரா அல்லது இவற்றை  கிடப்பில் போட்டு வெற்றுக்கதைகளை கூறிக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை மீண்டும் ஏமாற்றப்போகின்றாரா? இவைகள்தான் இன்று எம்மிடம் எழுந்துள்ள கேள்வி! 

அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கிய இடைக்கால அறிக்கையில் “இரண்டு அல்லது இரண்டுக்கும் அதிகமான மாகாண சபைகளை ஒரு மாகாணசபையாக இணைப்பதற்கான எந்தவொரு அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிராகவே உள்ளது” எனவும் அத்துடன்  “அரசியலமைப்பு வடக்கு மற்றும் கிழக்கை தனி ஒரு மாகாண சபையை அங்கீகரித்தலாகாது” எனவும் தெரிவித்துள்ளதாக இவ்வார பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் மற்றுமொரு சமூக கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில் எத்தகையை சிபார்சுகளை வழிநடத்தல் குழுவுக்கு வழங்கியுள்ளது என்பதை ரவூப்ஹக்கீம் தெளிவுபடுத்த வேண்டும்! 

அதேபோன்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் ஹரீஸ் அடிக்கடி மேடைகளில் வடக்கு-கிழக்கை இணைப்பதற்கு தாங்கள் உடன்படமாட்டோம் என்று கூறிவருகின்றாரேயோழிய அதனை தமது கட்சியின் கருத்தாக ஏன் வெளிப்படுத்த மறுக்கின்றார் எனவும்  புத்திஜீவிகள் ஒன்றியம் கேள்வியெழுப்பியுள்ளது. 

புதிய அரசியலைப்பு தொடர்பில் மு.காவின் நிலைப்பாடு என்ன? வாய்திறக்குமா? புதிய அரசியலைப்பு தொடர்பில் மு.காவின் நிலைப்பாடு என்ன? வாய்திறக்குமா? Reviewed by Ceylon Muslim on January 18, 2019 Rating: 5