ஜோதிடருக்கு கார் பரிசளித்த மகிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், ஜோதிடருக்கு வழங்கிய வாகனம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணி செய்யாத தனக்கு, மிஹின் லங்கா ஊடாக வாகனம் வழங்கியமை தொடர்பில், மஹிந்தவிடம் கேட்க வேண்டும் என பிரபல சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவையில் இடம்பெற்ற முறைக்கேடு தொடர்பில ஆராய்ந்து பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய சுமனதாஸ இதனை குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் தனக்கு வழங்கப்பட்ட வாகனத்திற்கு மிஹின் லங்கா ஊடாக 82 லட்சம் ரூபா செலுத்தப்பட்டதாக சுமனதாஸ கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர், சுமனதாஸவிடம் கேள்வியெழுப்பும் போது இந்த கேள்விகளை என்னிடம் அல்ல மஹிந்தவிடமே கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தான் தேசிய சேமிப்பு வங்கியில் செயற்பாட்டு இயக்குனராக 8 வருடங்கள் பணி செய்ததாக அவர் கூறியுள்ளார். 2007ஆம் ஆண்டு ஜுலை மாதம் மஹிந்த ராஜபக்ச தன்னை அழைத்து, வாகனம் ஒன்று உள்ளது எடுத்துச் செல்லுமாறு கூறினார். அது பெரிய வாகனம் அல்ல. என்னிடமே பென்ஸ், அவுடி கார், போஜோ கார் போன்ற பல வாகனங்கள் காணப்பட்டன. அதே போன்று வங்கியிலும் வாகனம் வழங்கப்பட்டது.

அரசாங்கம் மாறிய பின்னர் வாகனத்தை ஒப்படைக்குமாறு கோரினார்கள் ஒப்படைத்து விட்டேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஜோதிடர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்திய மஹிந்த, அதில் தோல்வி கண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...