பொன்சேகாவின் "பீல்ட் மார்ஷல்" பதவியை நீக்குவேன் - ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் நிலவும் கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தொடர்ந்தும் தன்னை விமர்சித்தால் அவரின் பீல்ட் மார்ஷல் பதவியை நீக்குவேன் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் இருவரிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில் அவருக்கு அமைச்சு பதவியை வழங்குவதையும் ஜனாதிபதி மறுத்து வருகிறார்.

அதேவேளை சரத் பொன்சேகா மற்றும் பாலித ரங்கேபண்டார ஆகியோருக்கு அமைச்சு பதவியை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களான கபீர் ஹஷீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து சரத் பொன்சேகா மற்றும் பாலித ரங்கேபண்டார ஆகியோருக்கு அமைச்சு பதவியை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன் குறித்த சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் குறித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தான் அச்சுறுத்தல்களுக்கு பயப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

தனக்கு அமைச்சு பதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர்ககளான கபீர் ஹஷீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துரையாடியதாக அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...