"தமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்"

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நிகரான அதிகாரம், இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு இந்த நாட்டிலே எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் தமது உரிமைக்காக போராடும் நிலை உருவாகக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – ஏறாவூரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ இந்த நாடு ஒரு இனத்துக்குரிய நாடு அல்ல. இந்த நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளும் சுயநிர்ணய உரிமையுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இதற்காகவே நாங்கள் அரசியல் தீர்வினைக் கோரியுள்ளோம். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகம் ஏனைய தேசிய இனங்களை அடக்க முடியாது.

தமிழ் மக்களுக்கு அதிகாரம் கிடைக்குமாகவிருத்தால், முஸ்லிம் மக்களுக்கும் அதே அதிகாரம் சமனாக வழங்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் நியாயமான அரசியல் தீர்வினைப் பெறும்போது, இஸ்லாமிய மக்கள் தமது உரிமைக்காகப் போராடும் நிலை உருவாகக் கூடாது. இங்கு வாழும் இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்கள் கேட்காமலே அந்த மக்களுக்குரிய உரிமை வழங்கப்பட வேண்டும்.

முன்னாள் பிரதியமைச்சராகவிருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தமிழ் – முஸ்லிம் மக்களை மோதவிட வேண்டும் என்று பல நடவடிக்கைகளை அண்மைக்காலமாக முன்னெடுத்து வருகிறார். கிழக்கில் முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமித்தது தொடர்பாக பல கருத்துக்கள் வெளியிடுகிறார். இதேநேரம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் உள்ள அவர், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் எல்லாவற்றையும் தமிழர்களுக்கெதிராகச் செய்கிறது, அதற்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போகிறது என கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்க உதவினாலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை தூக்கியெறிந்து அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஒருபோதும் அமைச்சுப் பதவிகளைப் பெறமாட்டோம் “ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"தமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்" "தமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்" Reviewed by Ceylon Muslim on January 21, 2019 Rating: 5