கட்சி பேதங்களை கடந்து அபிவிருத்திகளை வரவேற்போம் - காதர் மஸ்தான்

ஹுஸைனியாபுரம் மேற்கு இளைஞர்களின் நீண்ட நாள் கனவான கரப்பந்தாட்ட மைதான அமைப்பு என்னால் நிறைவானதை எண்ணி மகிழ்வுறுகிறேன்.எமது பிரதேசத்துக்கு யார் அபிவிருத்திகளை கொண்டு வந்தாலும் அவற்றை வரவேற்று எமது கிராமங்களின் முன்னேற்றத்திற்கு நாம் உறுதுணையாக இருப்பதுதான் புத்திசாதுரியமான காரியம் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும், இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னால் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் தெரிவித்தார். 

புத்தளம் ஹுஸைனியாபுரம் மேற்கில் கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் பதின்மூன்று இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட திடலில் லெம்டா விளையாட்டு கழகத்தினரால் நடத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பொழுதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது,

நாம் தேர்தல் இல்லாத இக்காலத்தில் இந்த அபிவிருத்திகளை செய்கிறோம்.நான் பிரதி அமைச்சராக பதவி வகித்த குறுகிய காலத்திற்குள் கிட்டதட்ட 500 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்திகளை செய்திருக்கிறோம்.வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் சிதறி வாழும் எம்மக்களுக்கு பல்வேறு வகையான பிரச்சினைகளும் தேவைகளும் இருக்கின்றன.

தேவைப்பட்ட மக்களுக்கே அபிவிருத்தி சென்றடைய வேண்டும் என்பதிலும் இனமத கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று சேவைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதிலும் நாம் அக்கறையோடு இருக்கின்றோம் என்பதையும் இந்த இடத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறேன். 

இந்த ஹுஸைனியாபுரம் மேற்கு இளைஞர்களின் நீண்ட கனவான இந்த மைதான புனரமைப்பு மூலம் மழுங்கடிக்கப்பட்ட விளையாட்டு உணர்வுகள் மீண்டும் வீறுநடை போட வாழ்த்துகிறேன் எனவும் குறிப்பிட்டார். 

இந் நிகழ்வில் ISRC பணிப்பாளர் ஜனாப்.மிஹ்லார். சட்டத்தரணி கே.எம்.சஜாத் மாந்தை மேற்கு பிரதேச சபை முன்னால் உறுப்பினர் ஏ.எச் .சனூஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
கட்சி பேதங்களை கடந்து அபிவிருத்திகளை வரவேற்போம் - காதர் மஸ்தான் கட்சி பேதங்களை கடந்து அபிவிருத்திகளை வரவேற்போம் - காதர் மஸ்தான் Reviewed by NEWS on February 26, 2019 Rating: 5