போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியுள்ளது - AFP குற்றம்

போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி. (AFP) குற்றம் சாட்டியுள்ளது.

சர்வதேச செய்தி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பொன்றிலேயே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பழைய விடயங்களை திரும்ப திரும்ப பேச விரும்பவில்லை என்றும், கடந்த காலத்தை மறந்து சமாதானமாக வாழ்வோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஊடக பிரதானிகளுடன் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இக்கருத்தை விமர்சித்தே சர்வதேச செய்தி நிறுவனம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

குறித்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘இலங்கையின் இறுதி யுத்தத்தில் சுமார் 40 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் அரச படைகளால் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளை நடத்தக் கோரி, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் முறைப்படி கோரவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

2015இல் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டதாக இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...