நான் கட்சியை விட்டு விலகியதும் , அட்டாளைச்சேனை மகிழ்ச்சி அடைந்தன - உதுமாலெப்பை

கட்சிக்கும், தலைமைக்கும், வாக்களித்த மக்களுக்கும் உச்ச விசுவாசமாக செயற்பட்டு நம்பிக்கை துரோகமிழைக்காமல் மனவேதனையுடன் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளேன்.


தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், தலைமைதுவத்திற்கும் உச்ச விசுவாசமாக இருந்து அர்ப்பணிப்போடு செயற்பட்டு கொள்கை ரீதியான முரண்பாடுகளினால் வெளிப்படையாகவே கட்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்து தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து வேதனையோடு விலகி உள்ளோம். எனது வெளியேற்றத்தை பிரதேசவாத உணர்வோடு யாரும் நோக்கக் கூடாது பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட்டு எமது அடுத்த அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக தீர்மாணங்களை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண முன் பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவிதர்தார்.

உலமாக்கள், கல்விமான்கள், பிரமுகர்களுக்கிடையிலான விஷேட கூட்டம் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்....

நாம் தேசிய காங்கிரஸிக்கும், அதன் தலைமைதுவத்திற்கும் உச்ச விசுவாசமாக இருந்து செயற்பட்டதனால் அக்கட்சியும், தலைமையும் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான அரசியல் அதிகாரத்தினை இரண்டு தடவைகள் வழங்கியது. இதனால் முடிந்தளவு கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் சிறந்த அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கும் குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேசம் பாரிய அபிவிருத்தினையும் நன்மையினையும் பெற்றுள்ளது. என்பது யதார்த்தமாகும். இந்நிகழ்வை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

நாம் கட்சியில் இருந்து வெளியேரியதனை யாரும் பிரதேச வாத உணர்வோடு பார்க்க கூடாது. நமது மூத்த அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் நலனுக்காகவே ஒற்றுமையாக கிழக்கில் வாழ்ந்து வந்த முஸ்லிம் கிராமங்களில் பிரதேச வாத உணர்வுகளை ஊட்டி முஸ்லிம் மக்களையும், முஸ்லிம் பிரதேசங்களையும் பிரித்து வைத்தனர். இதனால் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் பகை உணர்வுகள் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன.

மறைந்த பெரும்ம தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை உருவாக்கியதால் கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் இருந்த பிரதேசவாத உணர்வுகள் இல்லாமல் செய்யப்பட்டு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களும் பிரதேசங்களும் ஒற்றுமையாக வாழும் நிலமை உருவாக்கப்பட்டது. இதேபோல் தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அதாஉல்லா அவர்களினால் உருவாக்கப்பட்ட தேசிய காங்கிரஸ் கட்சியின் தோற்றத்தினால் நமது பிரதேசங்களில் மிஞ்சியிருந்த பிரதேச வாத உணர்வுகள் இல்லாமல் செய்யப்பட்டு நீண்டகாலமாக அரசியல் அதிகாரங்கள் வழங்கபடும் என ஏமாற்றப்பட்டு வந்த அயல் கிராமங்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டது. இது இலங்கை அரசியலில் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

ஜனநாயக ரீதியில் கொள்கை முரண்பாடுகள் ஏற்பட்டு நாம் தற்போது தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறி உள்ளோம். இதற்கான என்னை விமர்சனம் செய்யும் ஒரு கூட்டம் விமர்சனம் செய்து கொண்டு இருப்பார்கள். அவைகளை நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டிய தேவையில்லை. என்னையும் கட்சியின் மூத்த பிரமுகர்களையும் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அந்த குழு உச்சமான விமர்சனங்களை செய்து அதன் நோக்கத்தினை நிறைவேற்றியுள்ளனர்.

இதற்கு பதில் அளிப்பதற்கோ, விமர்சனங்களை எழுதி பிரச்சினைகளை வளர்க்க வேண்டிய தேவை எமக்கு இல்லை என்பதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நீண்ட காலமாக உருவாக்கிய கட்சியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்பதற்காக கட்சிக்குள் நடந்த எல்லா விடயங்களையு;ம பகிரங்கமாக கூறும் அரசியல் கலாச்சாரத்திற்கு நாம் எப்போதும் எதிரானவர்கள் என்பதனை மறந்து விடக் கூடாது. தனிநபர் உறவுகள் முறிந்தாள் கூட உறவாக இருந்த காலத்தில் நடந்தவைகளை பேசுவது தர்மம் இல்லை. என்னை விமர்சனம் செய்யும் போது நான் மௌனமாக இருந்து கொள்கின்றேன். ஏனெனில் என் மீது வீண் பழி சுமத்துவர்களுக்கு நான் ஒரு போதும் பதில் கொடுப்பதில்லை. இந்த விடயத்தில் அவர்கள் இறைவனை அஞ்சி நடக்க வேண்டியுள்ளது.

அரசியல்; கட்சியில் அங்கம் பெற்று அக்கட்சிக்கு விசுவாசமாக செயல்படுவது என்பது குடும்பமாக வாழ்வது போன்றதாகும். நாம் கட்சியில் இருந்து கொள்கை ரீதியில் ஏற்பட்ட முரண்பாடுகளால் வெளியேறிவிட்டோம் என்பதற்காக இவ்வளவு காலமும் கட்சிக்குள்நடந்தவைகளை ஏனைய அரசியல் கட்சியினர் பகிரங்கமாக கூறும் நிலைமை போன்று நாம் செயல்பட முடியாது. இக் கலாச்சாரத்தை எப்போதும் எதிர்த்த வண்ணம் உள்ளோம்.

அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்த நமது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தேசிய காங்கிரஸிக்காகவும், அதன் தலைமைக்காகவும் நாம் பிறந்த மண் என்று பாராமல் கொள்கைக்கான அரசியல் பயணத்தில் பாரிய சவால்களை எதிர் நோக்கியும் தியாகங்களையும் நாம் செய்துள்ளோம்.

இதனால் நமது பிரதேசம் பாரிய நன்மைகளை பெற்றன அதற்காக அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களின் பங்களிப்பு எமக்கு கிடைத்தன. குறிப்பாக அக்கரைப்பற்று பிரதேசம் எமக்கான அரசியல் அதிகாரத்தினை வழங்குவதற்கு இதயமாக திகழ்ந்தது. அதனை நமது பிரதேச மக்கள் எப்போதும் மறந்து விடக்கூடாது.

நான் கட்சியை விட்டு வெளியேறியமை குறித்து உள்ளத்தால் வேதனை பட்ட பிரதேசம் அக்கரைப்பற்று என்பது எனக்கு நன்கு தெரியும். அந்த மக்கள் எனக்காக எப்போதும் ஆதரவு வழங்கியவர்கள். ஆனால் கட்சியை விட்டு வெளியேறிய போது நமது அட்டாளைச்சேனைப் பிரதேசம் மகிழ்ச்சி அடைந்தன. அதற்கான காரணங்களை நான் நன்கு அறிந்தவன். என்னைப் பொறுத்தவரை நான் எப்போதும் பிரதேச வாதத்தினை எதிர்ப்பவன். எனது பார்வையில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களை ஒரே பிரதேசமாக பார்ப்பவன் ஒரு சிலர் எங்களை விமர்சனம் செய்வதால் முழுப்பிரதேசமும் எம்மை விமர்சனம் செய்வமதாக நாம் நினைத்துவிடக் கூடாது.

நமக்கு எவ்வாறு அரசியல் அதிகாரம் கிடைத்ததோ அதே போல் அட்டாளைச்சேனை பிரதேசம் தேசிய காங்கிரஸிக்கும், அதன் தலைமைக்கும் அரசியல் அதிகாரம் கிடைப்பதற்கு பாரிய பங்கினை வழங்கி உள்ளது. அக்கரைப்பற்று மக்களின் வாக்குப்பலமும், அம்பாரை மாவட்ட ஏனைய பிரதேசங்களை சேர்ந்த வாக்குப் பலத்தினால் நமக்கான அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டது.

உண்மையில் நான் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே தீர்மானித்திருந்தேன். நமது ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்காகத்தான் எனது முடிவினை மாற்ற வேண்டி ஏற்பட்டது.

உலமாக்கள், கல்விமான்கள், பிரமுகர்கள் எல்லோரும் உங்களின் சிறந்த கருத்துகளை முன்வைத்தீர்கள். இந்த கருத்துகளை கருத்திற் கொண்டு எமது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் நாங்கள் ஒரு போதும் அவசர அவசரமாக தீர்மாணங்களை மேற்கொள்ளாமல் பொறுமையாகவும், நிதானமாகவும் செயற்பட்டு தீர்மாணங்களை மேற்கொள்ளலாம்.

எல்லா அரசியல் கட்சிகளும் நமது ஆதரவாளர்களை அனைக்கும் விடயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலையில் சிலர் தங்களின் இடங்கள் இல்லாமல் போய் விடும் என அஞ்சி அவர்களாகவே கணவு கண்டு நாங்கள் அவர்களின் கட்சியில் சேறுவதற்கு முனைவதாக கூறிக்கொண்டு பொய் செய்திகளையும் பரப்பி கொண்டிருக்கின்றனர். இந்த வேலையில் நாம் இவர்களின் செய்திகளுக்கு பதல் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. நாம் புதிய அரசியல் பயணத்திற்கான செயற்பாடுகளை நன்கு திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும் நாம் எடுக்கும் அரசியல் தீர்மாணம் எமது எதிர்கால சந்ததியினர் நன்மை அடைய கூடிய வகையில் இருக்க வேண்டும். நாம் இன்று சுதந்திரமான முறையில் சிந்தித்து நமக்கு விரும்பிய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. வெளிப்படையாகவே பேச்சி வார்த்தைகளில் ஈடுபட்டு நமக்கு விரும்பிய அரசியல் பாதையினை எல்லோரினாலும் ஆலோசனைகளைப் பெற்று தீர்மாணிப்போம் எனத் தெரிவித்தார்.
நான் கட்சியை விட்டு விலகியதும் , அட்டாளைச்சேனை மகிழ்ச்சி அடைந்தன - உதுமாலெப்பை நான் கட்சியை விட்டு விலகியதும் , அட்டாளைச்சேனை மகிழ்ச்சி அடைந்தன - உதுமாலெப்பை Reviewed by NEWS on March 14, 2019 Rating: 5