துப்பாக்கிச்சூட்டில், உயிர்தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

நியூசிலாந்தின் கடலோர நகரமான கிறிஸ்ட்சேர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றை இலக்காக கொண்டு நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதல்களில் இருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் எந்தவித சேதங்களுமின்றி தப்பித்திருக்கின்றனர்.

நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகின்றது.

இந்த சுற்றுப் பயணத்தில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்து, டெஸ்ட் தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி கிறிஸ்ட்சேர்ச் நகரில் நாளை (16) நடைபெற இருந்த நிலையில் பங்களாதேஷ் அணி போட்டி நடைபெறும் கிறிஸ்ட்சேர்ச் நகரில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இன்று (15) வெள்ளிக்கிழமை என்பதால் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பங்களாதேஷ் அணி வீரர்கள் சிலரும் உதவியாளர்களும் அருகில் உள்ள அல்-நூர் பள்ளிவாசலிற்கு “வெள்ளிக்கிழமை தொழுகை (ஜூம்ஆ) “ கடமைகளை நிறைவேற்ற பஸ்வண்டி ஒன்றில் பயணம் செய்திருந்தனர்.

பங்களாதேஷ் அணியினர் பஸ் வண்டி மூலம் குறித்த பள்ளிவாசலிற்கு அருகில் சென்ற போதே, பள்ளிவாசலின் உள்ளே மிகவும் கொடூரமான முறையில் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் சம்பவ இடத்திலிருந்து உடனடியாக பங்களாதேஷ் அணி வீரர்களும், உதவியாளர்களும் வெளியேற்றப்பட்டதோடு பாதுகாப்பான முறையில் தாம் தங்கியிருந்த ஹோட்டலிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் பள்ளிவாசலினுள் பங்களாதேஷ் வீரர்களோ உதவியாளர்களோ சென்றிருக்கவில்லை.

எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பள்ளிவாசலின் உள்ளே இருந்த இளம் சிறார்கள் உட்பட 30 பேர் வரை இதுவரையில் பலியாகி இருப்பதோடு, மேலும் பலர் காயத்திற்கும் ஆளாகியிருக்கின்றனர்.இந்த கோர துப்பாக்கி சூட்டு சம்பவம் மிகவும் அபாயகரமாக இருந்தது என குறித்த பள்ளிவாசலிற்கு சென்ற பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேநேரம், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து நாளை நடைபெறவிருந்த நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டி இரண்டு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகளின் விருப்பத்திற்கு அமைவாக கைவிடப்பட்டிருக்கின்றது.இப்போட்டி கைவிடப்பட முன்னர் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் இந்த டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“ நாங்கள் அதிர்ச்சியுடன் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றோம். அனைத்து நியூசிலாந்து நாட்டவர்களும் இவ்வாறான நிலையிலேயே இருப்பர். நான் எனது பங்கிற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் பேசி விட்டேன். எனவே, இரண்டு நாடுகளின் கிரிக்கெட் சபைகளும் இப்படியான ஒரு தருணத்தில் கிரிக்கெட் விளையாடுவது பொருத்தமற்றது. “ என நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட நிர்வாகி டேவிட் வைட் கதைத்திருந்தார்.

இதேநேரம், நியூசிலாந்தின் பிரதமரான ஜெசின்டா ஏர்டர்ன், இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற தினம் தமது நாட்டினுடைய கறுப்பு தினங்களில் ஒன்று என தெரிவித்திருக்கின்றார்.

அதோடு, இந்த கோர துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை கிரிக்கெட் பிரபலங்களும் மிக வன்மையாக கண்டித்திருக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்திற்கு எதிராக உலகம் பூராகவும் இருந்து எதிர்ப்பலைகள் கிளம்பி வருகின்றன.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் காரில் பொருத்தப்பட்ட வெடி குண்டுகள் மீட்கப்பட்டிருக்கின்றதோடு, இன்னுமொரு பள்ளிவாசலும் துப்பாக்கிதாரிகளினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த துப்பாக்கிச் சூட்டின் பிரதான சூத்திரதாரி அவுஸ்திரேலியாவினை பிறப்பிடமாக கொண்ட 28 வயது வாலிபர் என இனம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த சூத்திரதாரி வெள்ளைநிற மேலாதிக்கவாதி (white supremacist) என தெரிவிக்கப்படுகின்றது.அதோடு, இந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உள்ளடங்கலாக நான்கு நபர்களை நியூசிலாந்து போலிஸார் கைது செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
துப்பாக்கிச்சூட்டில், உயிர்தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி துப்பாக்கிச்சூட்டில், உயிர்தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி Reviewed by NEWS on March 15, 2019 Rating: 5