Mar 8, 2019

மகளிருக்கான சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி, குடும்ப சுமையை குறைக்க முடியும் -அமைச்சர் ஹக்கீம்

நாச்சியாதீவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.

மகளிருக்கான சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் குடும்ப சுமையை குறைக்க முடியும். நாடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மகளிர் காங்கிரஸ் பல உள்ளன. அவ்வாறே இந்த திறப்பனை பிரதேச சபைக்குற்பட்ட இந்த பிரதேசத்தில் பிற சமூகத்தை சேர்ந்த பெண்களும் முஸ்லிம் காங்கிரசுக்கு கீழே இயங்குகின்ற மகளிர் காங்கிரஸ் அணியில் இணைந்து இயங்க ஆரம்பித்திருப்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இங்கே செல்வாக்கு அதிகரித்திருப்பதனை காட்டுகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அண்மையில் அனுராதபுர மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நாச்சியாதீவில் நீர் சுத்திகரிக்கும் இயந்திரம் மற்றும் புணருத்தாபனம் செய்யப்பட்ட இரண்டு பாதைகள் என்பவற்றை திறந்து வைத்து உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அங்கு உரை நிகழ்த்திய போது 

இந்த மாவட்டத்தின் பிரதான தேவையாக உள்ள தூய குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் எமது செயற்திட்டங்களை கொண்டு நடத்துகிறோம். குறிப்பாக இந்த மாவட்டத்தில் அதிகமான சிறுநீரக பாதிப்புள்ளானவர்கள் இருக்கின்றார்கள். இவற்றை கட்டுப்படுத்தும் பல செயற்த்திட்டங்களை நாங்கள் செயற்படுத்தி வருகிறோம். குழாய் வழியான சுத்தமான குடிநீரினை நீர் மூலவளம் உள்ள பகுதிகளுக்கு வழங்கி வருகிறோம். அதேபோல அதிகஷ்ட பிரதேசங்களுக்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவி தற்காலிக தீர்வினை வழங்கி வருகிறோம்.

உரிமைக்காக குரல் கொடுக்கின்ற அதேவேளை, அபிவிருத்தியையும் நாங்கள் பரவலாக செய்துவருகிறோம். இப்போது இந்த பகுதிகளில் எமது கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை இந்த கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் பெரும்பான்மை இன சகோதரர்களை பார்க்கும் போது உணர முடிகிறது. பெரும்பான்மை சகோதர்கள் எம்மோடு இணைவதனால் முஸ்லிம் சமூகத்தினர் எம்மை சந்தேகத்துடன் நோக்க தேவையில்லை, ஏனென்றால் இந்த கட்சியானது பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதில் முன்னிற்கும் இதன் போது இனமத பேதங்களை நாம் பார்ப்பதில்லை. 

எல்லா இனமக்களையும் இணைத்து செயற்படும் வகையில் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னணி (NUA) என்ற கட்சியை உருவாக்கினார். சில காரணங்களினால் அது வெற்றியளிக்கவில்லை ஆனால் தற்போது அதன் தேவை உணரப்படுகின்றது. உண்மையான இனநல்லிணக்கத்தை இதன் மூலம் நமக்கு நிறுவமுடியும். இங்கு வந்துள்ள அதிகமான சிங்கள சகோதரர்களை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நல்லிணக்கம் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ அவசியமானதாகும் என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல், முன்னாள் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.சி.ராவுத்தர் நெய்னா முஹம்மத், அமைச்சரின் ஊடக இணைப்பாளர் நாச்சியாதீவு பர்வீன், நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பிராந்திய உதவி பொது முகாமையாளர் சுதத் ரத்நாயக்க, முஸ்லிம் காங்கிரசின் பிரதேச சபை உறுப்பினர்களான ரபீக் ஆசிரியர், நபீஸ்,யாசீர், அல் -பாரிஸ் மற்றும் ஏ.ஏ,எம்.ரஸ்கான் ஆகியோர் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

நாச்சியாதீவு ஜும்மா பள்ளிவாசல் நிருவாக்கத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க 22 இலட்சம் ரூபா செலவில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியில் புணருத்தாபனம் செய்யப்பட்ட பாதைகள் என்பன அன்றைய தினம் பொதுமக்களின் பாவனைக்காக அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டதோடு நாச்சியாதீவு புதிய நகர் கொடவான் பிரதேசத்தில் பாலத்திற்கான அடிக்கல்லும் நடப்பட்டது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network