மக்கள் விடுதலை முன்னனிக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற உள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மக்கள் விடுதலை முன்னனியினர் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். 

மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, விஜித ஹேரத் மற்றும் டில்வின் சில்வா ஆகியவர்களே இவ்வாறு வருகை தந்துள்ளனர். 

கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களுடன் நேற்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மக்கள் விடுதலை முன்னணியுடன் இன்று (06) இடம்பெற உள்ள சந்திப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வது தமது கடமையும் பொறுப்பு என அவர் குறிப்பிட்டார். 

அதனடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணியின் வேண்டுகோளின் பிரகாரம் இச்சந்திப்பு இடம்பெறுவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்கள் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் நாட்டிற்கு நன்மைபயக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இன்றைய தினத்தில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகளில் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Share The News

Post A Comment: