அறுவைக்காட்டு பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பாராளுமன்றில் பேச்சு (படங்கள்)

இரு வார காலத்திற்குள் பாதிப்புக்களை சமர்ப்பிக்குமாறு மக்களிடம் பிரதமர் வேண்டுகோள்

(ஊடகப்பிரிவு)

புத்தளம், அறுவைக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படப்போகும் பாதிப்புக்களை இரண்டு வார காலத்திற்குள் தமக்கு சமர்ப்பிக்குமாறும், அதனை விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் புத்தளம் பிரதிநிதிகளுடன் மீண்டும் ஒரு கலந்துரையாடலை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (05.03.2019) மாலை உறுதியளித்தார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஏற்பாட்டில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மேல்மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் கிளீன் புத்தளம் அமைப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், திட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இது தொடர்பாக தாங்கள் அறுவைக்காட்டில் மேற்கொண்டுள்ள பூர்வாங்க நடவடிக்கைகளை விவரண ஒளிப்படங்கள் மூலம் விளக்கினர். அதன் பின்னர் இடம்பெற்ற கருத்தாடலின் போது, புத்தளம் கிளீன் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் இந்த திட்டத்தினால் புத்தளம் மாவட்டத்திற்கு ஏற்படவிருக்கும் பாதிப்புக்களை விபரித்தனர்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இங்கு கருத்து தெரிவித்த போது,

“புத்தளம் மாவட்ட மக்கள் மிகவும் நொந்து போயுள்ளனர். சூழலியல் தாக்கத்தினால் தொடர்ச்சியாக பாதிப்புற்றுவரும் அவர்கள் ஆதரவற்று இருக்கின்றனர். அரசாங்கம் முன்னெடுக்கும் அத்தனை சூழலியல் திட்டங்களும், புத்தளத்திற்கே கொண்டு செல்லப்படுவதனால் புத்தளம் மகக்ள் சூழலியல் பாதிப்புக்களால் தினமும் போராடி வருகின்றனர். ஜனாதிபதியையும் பிரதமர் தலைமையிலான இந்த அரசாங்கத்தையும் கொண்டுவருவதில் இந்த மக்கள் முழுமையான பங்களிப்பை நல்கியவர்கள். எனவே நாம் நன்றி மறந்து செயற்படக்கூடாது கொழும்பு உட்பட தென்னிலங்கை குப்பைகளை புத்தளத்தில் கொண்டுபோய் கொட்டும் திட்டத்தை அரசு நிறுத்த வேண்டும். 200 நாட்களுக்கு மேலாக வீதிகளிலே தொடர்ந்தும் சத்தியாக்கிரகப் போராட்டம் நடாத்தி வரும் இந்த மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க அண்மையில் புத்தளத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியிடம் அவர்கள் நேரம் ஒதுக்கி தருமாரு வேண்டுகோள் விடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை. அதனால் அறுவைக்காட்டு குப்பைத்திட்டத்திற்கு அதேநாள் தமது எதிர்ப்பை தெரிவித்த போது, விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றன. 70 வயது தாய் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். தாம் உருவாக்கிய இந்த அரசங்கத்தில் இவ்வாறு நடைபெற்றதால் அவர்கள் வேதனையடைந்தனர். மக்கள் என்னதான் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதும் அறுவைக்காட்டு திட்டத்தை முன்னெடுக்கும் நடவடிக்கை மிகவும் வேகமாக மேற்கொள்ளப்படுகின்றது. எவரையும் கருத்தில் எடுக்காது இவ்வாறு செய்வது அரசுக்கு நல்லதல்ல” அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு தெரிவித்தார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இத்திட்டம் தொடர்பான தமது பக்க நியாயங்களை எடுத்துரைத்தார். அமைச்சின் திட்ட அதிகாரிகளும் அறுவைக்காட்டு குப்பை திட்டம் தொடர்பில் நியாயப்படுத்தினர். கொழும்பு பல்கலைக்கழக சூழலியல் பேராசிரியர் திருமதி பரீனா ருசைக், இந்த திட்டத்தினால் மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்களை எடுத்துரைத்தார். க்ளீன் புத்தளம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பல்வேறு தரவுகளுடன் தமது கருத்துக்களை எடுத்துரைத்தனர். பிரதியமைச்சர் நிரோஸன் பெர்ணாண்டோ , ரங்க பண்டார எம்.பி ஆகியோரும் பாதிப்புக்களையும் எடுத்துரைத்தனர்.

இவைகளை நன்கு கேட்டறிந்துகொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இது தொடர்பில் , மக்களின் கருத்துக்களுக்காக இரண்டு வார காலம் அவகாசம் தருவதாகவும் அதன் பின்னர் மீண்டும் ஒரு கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கி தருவதாகவும் உறுதியளித்தார்.

முன்னதாக, புத்தளம் அறுவைக்காட்டு பிரச்சினை தொடர்பில் கடந்த மார்ச் 12ஆம் திகதி பாராளுமன்ற கட்டிட தொகுதியில் கிளீன் புத்தளம் அமைப்பினர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கலந்துரையாடலின் போதே, பிரதமருடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான நேரத்தை பெற்றுக்கொள்ளு பொறுப்பு அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ரங்க பண்டார எம்.பி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, அலிசாஹிர் மெளலானா, ஹரீஸ், நிரோஷன் பெர்ணாண்டோ, பிரதியமைச்சர்களான பைஷல் காசீம், அப்துல்லா மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான பெளசி, ஹெக்டர் அப்புஹாமி, பேராசிரியர் இஸ்மாயில், இஸாக் ரஹ்மான், முஜீபுர் ரஹ்மான், தெளபீக், நஸீர் ஆகியோருடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் இர்ஸாத் ரஹ்மத்துல்லாஹ் பங்கேற்றிருந்தனர். கிளீன் புத்தளம் அமைப்பைச்சேர்ந்த, அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், வணபிதா கிரிஸ்டி பேராரா, வங்கட்ராமா சுந்தராம குருக்கள், இல்ஹாம் மரைக்கார், உம்முல் ஹைர், ஷஹீட் முகம்மது முபாறக், ஜயந்த விஜயசிங்க, அமீனுல்லா அர்சத் அலி, ஹிதாயத்துல்லா அஜ்மல், அலி சப்ரி, நஸ்லியா அப்துல் காதர், ஹினாயதுல்லாஹ் செய்யது நிப்ராஸ், எஸ்.ஏ.சி.பி மரைக்கார் ஆகியோர் பங்கேற்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...