அண்ணன் சந்திரசேகரனும், தாத்தா தொண்டமானுமே தனிவீட்டுத் திட்டத்துக்கு அடித்தளமிட்டனர் - சபையில் அடித்துக் கூறினார் தொண்டா! 

'' மலையகத்தில் தனி வீட்டுத் திட்டத்துக்கு மறைந்த தலைவர் அண்ணன் சந்திரசேகரனும், சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவுமே அடித்தளமிட்டனர்.'' என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது (03) நடைபெற்றுவரும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'' மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான மறைந்த அண்ணன் சந்திரசேகரனே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தனிவீடுகள் கிடைக்க வேண்டும் என்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
காணி உரிமையுடன் வீடு கிடைக்க வேண்டும் என்பதில் அண்ணனும், ஐயாவும் உறுதியாக நின்றனர்.
இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் தற்போது ஏழு பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டுவருகின்றது.
எனினும், ஏழு பேர்ச்சஸ் என்ற அளவு சிலருக்கு முழுமையாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.
அதேவேளை, பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டம் தரம் குறைவாக இருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பொகவந்தலாவையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்தன.
50 நாள் ஆட்சியின்போது இவை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தரம் குறைவான பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது உறுதியானது. அரச நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்கின்றேன்.
ஏழு பேர்ச்சஸ் காணி போதுமானதல்ல. அதைவிடவும் கூடுதல் அளவு பகிரப்பட வேண்டும். இதை பெற்றுக்கொடுக்க முன்வருபவர்களுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும்.'' என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...