Apr 3, 2019

கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களை பிரிப்பதற்கு மிக நீண்ட காலமாக மாபெரும் சதி திட்டம் தொடர்ந்து முன்னெடுப்பு - எச்சரிக்கிறார் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத்

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு மாபெரும் சதி திட்டம் மிக நீண்ட காலமாக தொடர்ந்தேச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் எச்சரித்தார்.
இலக்கியன் முர்ஷித்தின் நஞ்சுண்ட நிலவு நூல் மீதான அனுபவ பகிர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது பேராளராக கலந்து கொண்டு பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-
ஈழ விடுதலை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதில் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து செயற்பட்ட நேரம் தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கான சதி அரங்கேற்றப்பட்டது என்று நான் நினைக்கின்றேன். இதற்கு பின்னால் வெளிநாட்டு, உள்நாட்டு புலனாய்வு சக்திகள் இருந்தன. இதன் காரணமாக தமிழ், முஸ்லிம் புத்திஜீவிகள், இளைஞர்கள், அரசியல்வாதிகள் வீழ்ந்தனர். இயக்கங்களும் வீழ்ந்தன. இன்று வரை மீண்டு எழுந்து நடமாட முடியாதவர்களாக இருக்கின்றோம்.
எங்கு பார்த்தாலும் சண்டைதான். பெரும்பான்மை என்கிற திமிர் இனங்களை பிரித்து வைத்திருக்கின்றது. இலங்கை முழுவதும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த பெரும்பான்மை திமிர் அவர்களிடம் இருக்கின்றது.வட கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த பெரும்பான்மை திமிர் அவர்களின் அரசியலுக்கு இருக்கின்றது. அம்பாறையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த பெரும்பான்மை திமிர் முஸ்லிம்களிடம் உள்ளது. இந்நிலையில் நாம் எல்லோரும் மொழியால் இணைவோம், கலையால் கலப்போம் என்கிற சரியான திட்டத்தை முன்வைத்து நிறுவனமயப்பட்ட வகையில் முன்னெடுக்காவிட்டால் மிக இலகுவாக அழிந்து விடுவோம். அந்த அந்த நிலங்களில் அந்த அந்த பெரும்பான்மைகளை அங்கீகரித்து, இன வேறுபாடுகள் அற்ற வகையில் அவரவர் அந்தஸ்துகளை ஏற்று கொண்டு எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
தமிழை மொழியாக கொண்டு வடக்கிலும், கிழக்கிலும் வாழ்கின்ற தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஆபத்து காத்து கிடக்கின்றது. நாம் எதிரிகளையும், எதிரிகளின் சதிகளையும் அடையாளம் கண்டு வெற்றி கொள்வதற்கும், விலகுவதற்கும் கற்று கொள்ள வேண்டும். தமிழ் அரசியல் என்பது தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரானதாக உள்ளது. முஸ்லிம்களின் அரசியல் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரானதாக உள்ளது. சிங்கள அரசியல் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரானதாக இருக்கின்றதே ஒழிய அது சிங்களவர்களுக்கு எதிரானதாக இல்லை. அதே நேரம் சர்வதேச வலை பின்னல் என்பது முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக சர்வதேசம் முழுவதும் செயற்படுகின்ற மேற்குலக சக்திகளிடம் முஸ்லிம் தலைவர்கள் என்று சொல்லி கொள்வோர் அடிபட்டு போகின்றனர்.
ஆகவே புதிய நடைமுறைகளை, புதிய அரசியல் வழிமுறைகளை கை கொள்வதற்கு, பழைய நடைமுறைகளை விட்டு மீண்டெழுந்து வருவதற்கு நாங்கள் இலக்கியத்தை, எழுத்துகளை, கவிதையை, கதைகளை, நாவல்களை பயன்படுத்த வேண்டும். சமத்துவமான வாழ்வுக்கு, அவரவர் அந்தஸ்துகளுடன் வாழ்வதற்கு மக்களை தயார்ப்படுத்த வேண்டும். இதில் ஒரு பங்கை, பங்களிப்பை தம்பி முர்ஷித் செய்து உள்ளார் என்று நான் நினைக்கிறேன். அதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
சரியாக பிரச்சினைகளை அடையாளம் காண தவறினால் நாம் படுகுழியில்தான் விழ வேண்டும். உதாரணமாக வில்வத்து பிரச்சினை. உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் இயற்கைக்கு எதிரானவர்கள், பிரபஞ்ச கோட்பாடுகளுக்கு எதிரானவர்கள், உலோகாய்தவாதிகள், வியாபாரிகள், கொள்ளைக்காரர்கள், வரிகளை சரியாக செலுத்தாதவர்கள், கள்ள பணம் சம்பாதிப்பவர்கள், போதை வியாபாரம் செய்பவர்கள் என்றெல்லாம் பிரசாரங்கள் சர்வதேசமயப்படுத்தப்பட்டு உள்ளன. அதில் ஒரு அங்கம்தான் வில்பத்து. ஆனால் அது உண்மையில் காடழிப்பு பிரச்சினை அல்ல. முஸ்லிம்களை கொண்டு முஸ்லிம்களையும், முஸ்லிம்கள் அல்லாதவர்களை பயப்படுத்துகின்றனர். அதன் ஒரு அம்சம்தான் வில்பத்து. அச்சம்தான் மிக பெரிய இலவச முதலீடு. அந்த முதலீட்டை வியாபாரிகளும் பல் தேசிய கம்பனிகளும் செய்கின்றன. அச்சத்தை ஏற்படுத்துவது ஒரு கைத்தொழில் முயற்சி போல் ஆகி விட்டது. குறிப்பாக சிறும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதிகளில் வியூகங்கள் வகுத்து சதிகள் புரிகின்றனர். முஸ்லிம்களுக்கும், முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தவே நியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கி சூட்டு சம்பவம் நடத்தப்பட்டது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network