பிள்ளையானின் வழக்கு ஜூலை 31 வரை நீடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் ஜுலை 31 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இர்ஸடீன் முன்னிலையில் நேற்று (02) நடைபெற்றது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ வீரரான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

நேற்றைய அமர்வில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கினை நீதிபதி ஜுலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி நத்தார் நள்ளிரவு ஆதாரனையின் போது மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையானின் வழக்கு ஜூலை 31 வரை நீடிப்பு பிள்ளையானின் வழக்கு ஜூலை 31 வரை நீடிப்பு Reviewed by NEWS on May 03, 2019 Rating: 5