ராஜித சேனாரத்னவின் பொய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – CTJ

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் தொடர்பில் இருந்ததாகவும், தேசிய பாதுகாப்பு பிரிவிடமிருந்து சம்பளம் பெற்று வந்ததாகவும், பின்னர் பயங்கரவாத அமைப்பை உருவாக்கியதாகவும் கடந்த 30.04.2019 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக அப்துர் ராசிக் உள்ளிட்ட சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் SLTJ உறுப்பினர்கள் சிலர் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோருக்கு அல்குர்ஆன் சிங்கள பிரதியை வழங்கும் புகைப்படங்களை ஊடகங்களுக்கு காண்பித்தார்.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கோ (CTJ), அப்துர் ராசிக் அவர்களுக்கோ முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் எவ்வித தொடர்பும் இதற்கு முன்போ இப்போதோ இருந்ததில்லை. அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை நேரடியாகவோ தொலை பேசி வாயிலாகவோ வேறு எந்த முறையிலோ ஒரு போதும் சந்தித்ததோ, சம்பந்தப்பட்டதோ இல்லையென்பதை மிகவும் பொறுப்புடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) இன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (02.04.2019) கொழும்பில் உள்ள அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் மற்றும் துணை செயலாளர் ரஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார்கள்.

அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்ன அவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து நின்று பச்சை பொய்யை பேசுவதை எந்தவொரு பொது மகனும் ரசிக்க மாட்டான் என்பதுடன் இவர் எவ்வளவு பெரிய பச்சைப் பொய்யர் என்பதையும் பொது மக்கள் அறிந்து கொள்வார்கள்.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அல்லது உதய கம்மன்பில MP அவர்களுக்கு குர்ஆன் வழங்கிய நேரத்தில் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்த காரணத்தினால் அவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வதற்காக ராஜித சேனாரத்ன குறிப்பிடுகிறார்.

ஒருவருடன் புகைப்படம் எடுத்ததே அவரிடமிருந்து பணம் பெறுகிறோம் என்பதற்கு ஆதாரம் என்றால் ராஜித சேனாரத்னவுடனும் அப்துர் ராசிக் உள்ளிட்டவர்கள் சந்திப்பு நடத்தி குர்ஆன் சிங்கள பிரதியை அன்பளிப்பு செய்திருக்கிறோம். அதன் புகைப்படத்தை இன்றும் எமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் காண முடியும். அப்படியானால் இப்போது எமது அமைப்புக்கும் அப்துர் ராசிக் அவர்களுக்கும் தற்போதைய UNP அரசாங்கமும், அமைச்சர் ராஜிதவும் பணம் தருகிறார்கள் என்று அர்த்தமா?

அமைச்சர் ராஜிதவுடனும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சந்தித்து சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்து புகைப்படம் எடுத்துள்ளதை மறந்த நிலையிலேயே ராஜித சேனாரத்த தனது பச்சை பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பொறுப்பற்ற பச்சை பொய்யான பேச்சு தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தரணிகளுடன் ஜமாஅத் சார்பில் கலந்துரையாடி வருகிறோம். என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

*முகத்திரை தடை வரவேற்கத்தக்கது – காதுகளை பெண்கள் திறக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.*

பெண்கள் முகத்தை மறைத்து அணியும் முகத்திரைக்கு தற்போது அரசு தடை விதித்துள்ளது. இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களான திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் அவர்களின் வழிகாட்டல் அடிப்படையிலேயே பெண்கள் முகத்தை மறைத்தல் என்பது தடுக்கப்பட்ட ஒன்றாகும்.

முகம் மறைத்தல் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியருக்கு மாத்திரமுள்ள சட்டமாகும். அதனை வேறு எந்த பெண்களும் நடைமுறைப்படுத்தக் கூடாது. திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலும் இதனைத்தான் தெளிவாக நமக்கு கற்றுத் தருகின்றன.

ஆகவே முகம் மறைத்தல் தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம், முகம் மறைத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் பெண்கள் காதுகளையும் திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வழிகாட்டல்களுக்கு எதிரான ஒன்றாகும். இது தொடர்பாக அரச உயர் மட்டங்களுக்கு தெளிவு படுத்த முயல்வதுடன், முஸ்லிம் பெண்கள் காதுகளை திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு தொடர்பில் சட்ட ரீதியிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க ஜமாஅத் சட்டத்தரணிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது.

*NTJ என்கிற தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. CTJ, SLTJ, ACTJ, UTJ மற்றும் உள்ளுர் தவ்ஹீத் அமைப்புகள் எதுவும் தடை செய்யப்பட வில்லை.*

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஸஹ்ரான் ஹாஷிம் என்பவர் உருவாக்கிய தேசிய தவ்ஹீத் ஜமாஅத் – NTJ என்ற அமைப்பும் JMI என்ற ஜமாஅத்தே மில்லதே இப்றாஹீம் என்ற அமைப்பும் மாத்திரமே இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தவிரவுள்ள சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ), ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ), அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (ACTJ), ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) என்ற எந்த தவ்ஹீத் அமைப்புகளோ, உள்ளுர் தவ்ஹீத் அமைப்புகளோ இலங்கையில் தடை செய்யப்பட வில்லை. இந்த எந்த அமைப்புகளும் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்ட அமைப்புகள் என்று அடையாளப்படுத்தப்படவும் இல்லை.

பயங்கரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடைய தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பில் தகவல் வெளியிடும் ஊடகங்கள் NTJ என்று அல்லது நெஷனல் தவ்ஹீத் ஜமாஅத் எற்று முழுப்பெயரை தெளிவாக பயன்படுத்துமாறு ஊடகங்களிடம் வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

பயங்கரவாத செயல்பாட்டுடன் தொடர்புடைய குறித்த NTJ என்ற அமைப்புடன் இலங்கையிலுள்ள எந்தவொரு தவ்ஹீத் அமைப்புகளும் தொடர்புடன் இருக்க வில்லை என்பதுடன் குறித்த அமைப்புடன் மார்க்க ரீதியாகவே கருத்து வேறுபாடு காணப்பட்டமையும் குறிப்பிடத் தக்கதாகும்.

-ஊடகப் பிரிவு,

*சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ*
ராஜித சேனாரத்னவின் பொய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – CTJ ராஜித சேனாரத்னவின்  பொய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – CTJ Reviewed by NEWS on May 02, 2019 Rating: 5