ஜா-எல பள்ளிவாயலை அகற்ற மகஜர் கையளிப்பு

நாட்டில் தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற் கொண்டு, ஜா - எல, ஏக்கல, கம்பஹா வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசலை, உடன் அங்கிருந்து அகற்றுமாறு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களில் ஒன்றான தெளஹீத் ஜமா அத்துக்குச் சொந்தமான ஏக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பள்ளிவாசலை, அப்பிரதேசத்திலிருந்து உடன் அகற்றுமாறு கோரி கைச்சாத்திடப்பட்ட மகஜர் ஒன்றே கடந்த வாரம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.


ஜா - எல, ஏக்கல ஆகிய பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்தும் தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டியுமே குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மகஜரில் 2,100 பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஏக்கல மக்கள் ஒற்றுமை அமைப்பின் ஊடாக, ஜா - எல பிரதேச செயலகம் மற்றும் ஜா - எல பொலிஸ் நிலையம் ஆகியவற்றிட்கு இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.


ஏக்கல ஸ்ரீ வாலுகாராம புராண விகாரையின் பிரதானி நாரம்பனாவே விமலஜோதி தேரர் மற்றும் கொட்டுகொடை புனித கைதானு ஆலய பரிபாலகர் சிறியானந்த பெர்னாண்டோ ஆகியோரை முன்னிலைப்படுத்தி, இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )
ஜா-எல பள்ளிவாயலை அகற்ற மகஜர் கையளிப்பு ஜா-எல பள்ளிவாயலை அகற்ற மகஜர் கையளிப்பு Reviewed by NEWS on June 27, 2019 Rating: 5