தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 20, 2019

கல்முனை விவகாரம் : பிரதமர் தலைமையில் விசேட கூட்டம் இன்று

கல்முனை விவகாரம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல், குறித்த பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரதிநிதிகள் குழு நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தலைமையில் கொழும்பிற்கு வந்துகொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கல்முனை வடக்கு பிரதேரச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக மாவை சேனாதிராசாவும் தானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின்போது பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க தான் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஆனால், குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நிலையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் அதனை செய்ய முடியும் என்ற வாதத்தினை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் பிரதேச மக்களும் முன்வைத்து வருகின்ற நிலையில், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் 4ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதற்கமைய நேற்று போராட்டக்களத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவை வெளியிட்டிருந்தனர்.

அதைவிட பெருந்திரளான பிரதேச மக்களும் போராட்டம் நடைபெறுகின்ற இடத்திற்கு வந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்ற நிலையில், நேற்று கிறிஸ்தவ மதகுருமார் தலைமையில் 1000 மெழுகுவர்த்திகள் ஏற்றி போராட்டத்திற்கு ஆதரவு வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages