நேற்று ஏன் அவசரமாக, அமைச்சரவை கூட்டப்பட்டது..? விளக்குகிறார் ரணில்..!நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பான பிரச்சினைக்கு பதில் கூறும் பொறுப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒவ்வொரு கட்சியும் இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

இலங்கையின் இரண்டாவது மும்மொழி கல்வியுடன் கூடிய கலப்பு தேசிய பாடசாலையாக நிர்மாணிக்கப்படவுள்ள மீரிகம - தொன் ஸ்டீவன் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அதில் ஒரு பகுதியை நாம் நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ளதை செய்ய முற்படும் போது பிரச்சினைகள் தோன்றியுள்ளன. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு பல்வேறு தரப்பினராலும் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றமை புதுமையான விடயமல்ல. 

இந்த வார ஆரம்பத்தில் சில சிவில் மற்றும் மத அமைப்புக்கள் புதிய யோசனைகள் சிலவற்றை முன்வைத்துள்ளன. ஜே.வி.பி.யினுடைய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்பிக்குமாறும் அந்த அமைப்புக்கள் கோரியுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல்களில் நான் கலந்துகொள்ளவில்லை. ஆனால் எனக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றன. 

இந்நிலையில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையா முடியுமா என்று கேட்ட போது, கலந்துரையாட முடியும் என்று ஜனாதிபதியிடம் கூறினேன். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி விஷேட அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். அதற்கு முன்னர் நான் அமைச்சரவைக் கூட்டினேன். அதன் போது பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதை ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். 

எனினும் விஷேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஒவ்வொரு கட்சிகளும் தனித்து இது தொடர்பில் தீர்மானிக்குமாறு இணக்கப்பாடு எட்டப்பட்டது. இந்த இணக்கப்பாட்டுனேயே விஷேட அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது. எவ்வாறிருப்பினும் பொதுஜன பெரமுன கட்சியினரின் ஆதரவின்றி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை நிறைவேற்ற முடியாது. எமக்கு 150 கிடையாது. எனவே இது பற்றி கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பித்தாலும் பொதுஜன பெரமுன ஆதரவாக வாக்களித்தால் மாத்திரமே அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும். 

இதுவே விஷேட அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டது. எனினும் இவ்விடயம் தொடர்பில் பலரும் எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர். பிரச்சினைகள் இருந்தாலும் அனைத்து கட்சிகளும் இது தொடர்பில் தீர்வொன்றை எடுத்தாக வேண்டும். யாருக்கும் இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க முடியாது எனவும் இதன்போது கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...