சஜித்தின் ஐ.தே. கட்சி தலைவர் கனவை தீர்மானிக்கும் தேர்தல். கரணம் தப்பினால் மரணமா?

நீண்ட இழுபறிக்கும் போராட்டத்துக்கும் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிபந்தனையின் அடிப்படையில் சஜித் பிரேமதாசாவின் பெயரை அறிவிப்பு செய்யப்பட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இது மனச்சோர்வில் இருந்த ஐ.தே கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தினையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவுடன் முறன்பட்டுக்கொண்டு கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் ஐ.தே கட்சியில் இணைந்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது. 

இந்த இழுபறியினால் ஐ.தே கட்சி தனது வேட்பாளராக யாரை நிறுத்தப்போகின்றது என்ற ஆவலுடனான எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் அனைவரிடமும் காணப்பட்டதானது ஐ.தே கட்சியின் வாக்கு வங்கியில் சாதக தன்மையை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.தே கட்சியின் அடுத்த தலைமைத்துவத்தை இலக்காக கொண்ட சஜித் பிரேமதாசாவின் அரசியல் வாழ்வினை இந்த தேர்தலே தீர்மானிக்கப்போகின்றது. 

1994 ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளர் காமினி திஸ்ஸாநாயக கொல்லப்பட்டதனால் அவரது மனைவி சிறிமதி திஸ்ஸாநாயக பதில் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அத்தேர்தலில் ஸ்ரீமதி தோல்வி அடைந்ததனால் தேர்தலுடன் அவர் காணாமல்போனார்.

அந்த தேர்தலில் சிலநேரம் ஸ்ரீமதி வெற்றி பெற்றிருந்தால் ஐ.தே கட்சியின் தலைவராக அவரே இருந்திருப்பார்.

பின்பு 1999, 2005 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் ஐ.,தே கட்சி சார்பாக அதன் தலைவர் ரணில் விகரமசிங்க போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் அவரது தலைமைத்துவத்திற்கு சவால்விடுக்கும் நிலையில் அந்த கட்சிக்குள் யாரும் இருக்கவில்லை.

2005 க்கும் 2015 க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் கட்டம் கட்டமாக ஏராளமான தேர்தல்களை நடாத்தி மஹிந்த ராஜபக்ச தன்னை ஒரு வெற்றியாளராக காண்பித்ததனால், ஐ.தே கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. அதனால் அக்கட்சியின் தலைவர் பதவிக்கு ரணில் பொருத்தமற்றவர் என்ற நிலை அவரது கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உருவாகியது. 

இதனாலேயே ஐ.தே கட்சியை பலமடைய செய்வதென்றால் ரணிலை தலைமை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு உருவாகியதுடன், தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் சஜித் பிரேமதாசா என்று நம்பப்படுகின்றது. 

ஆனாலும் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் சாதாரணமானதல்ல. மறுபுறத்தில் கோட்டபாய ராஜபக்ச என்னும் பலம் பொருந்திய வேட்பாளரோடு போட்டி போடுகின்ற நிலையில் தான் எப்படியாவது வெற்றி பெற்றால்தான் ஐ.தே கட்சியின் தலைவர் பதவியை அடையமுடியும். 

2005 இல் சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்தவை நிறுத்தியபோது அவர் வெற்றி பெற்றதனால்தான் சந்திரிக்கா ஓரம்கட்டப்பட்டு கட்சியின் தலைமை பொறுப்பை மகிந்த கைப்பேற்றி இருந்தார்.

அத்தேர்தலில் மஹிந்த தோல்வி அடைந்திருந்தால், சிறிமதி திஸ்ஸாநாயக்காவுக்கு ஏற்பட்ட நிலைமையே மகிந்தவுக்கும் ஏற்பட்டிருக்கும்.

எனவே சஜித் பிரேமதாச ஐ.தே கட்சியின் தலைவர் பதவியை கைப்பேற்றுவதென்றால் எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றிபெற்றே ஆகவேண்டும். தோல்வி அடைந்தால் சஜிதும் வெற்றி வேட்பாளர் அல்ல என்ற தோற்றப்பாடு உருவாகிவிடும். அத்தோடு அன்று ஸ்ரீமதி திச்சானாயக்காவுக்கு ஏற்பட்ட நிலை ஏற்படாவிட்டாலும், ரணில் விக்ரமசிங்கவின் கைதான் தொடர்ந்து ஐ.தே கட்சிக்குள் மேலோங்கும்.

அத்துடன் ஐ.தே கட்சியின் தலைவர் பதவியை கைப்பெற்றுவதற்கு சஜிதுக்கு இன்று இருதரப்பு போட்டியாக இருக்கின்ற நிலைமையானது, தேர்தலுக்கு பின்பு பலதரப்பு போட்டியாக மாற்றமடையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இது அரசியலில் ஆச்சர்யப்படக்கூடிய விடயமல்ல. 

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்