றிசாட் பதியுதீன் மேற்கொண்ட துரித முயற்சியினால் யாழ் முஸ்லீம்களுக்கு 250 வீடுகள்..!- பாறுக் ஷிஹான் -

யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களிற்கு கிடைக்கப்பெற்ற வீட்டுத்திட்டம் அம்மக்களிற்கு ஓரளவு ஆறுதலளிப்பதாக உள்ளது எனவும் யாழில் முதலாவது முஸ்லிம் குடியேற்றம் அரங்கேற்ற பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நியாஸ்( நிலாம்) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 250 முஸ்லிம் குடும்பங்களிற்கான வீட்டுத் திட்டம் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதை அறிந்தேன். இந்த வீட்டுத்திட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் றிசாட் பதியுதீன் மேற்கொண்ட துரித முயற்சியினால் கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் எமது கட்சியின் தலைவர் மிக நிதானமாக சில விடங்களை எனக்கு உத்தரவாக வழங்கி இருந்தார்.அதற்கிணங்க காணிகள் பெறப்பட்டு இன்று இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இரண்டு மாடிகளை கொண்ட இரட்டை வீடுகளாக அமையவுள்ள குறித்த வீடுகள் புதிய சோனகத்தெரு பகுதியில் அமையவுள்ளன.ஒவ்வொரு வீடும் 600 சதுர அடிகளை கொண்டிருக்கும்.

இந்த வீட்டுத் திட்டம் பற்றி இறுதியாக பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, இந்த வீட்டுத் திட்டம் தொடர்பாக நான் மிகுந்த அக்கறை எடுத்து கூறியிருந்தேன். அதற்கு முன்னர் பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது வீட்டுத்திட்டத்திற்கான முதற்கட்ட ஆலோசனையை அமைச்சர் ரிசாத் பதியுதீன் நான் உட்பட யாழ் முதல்வர் ஆகியோர் முஸ்லிம் மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தோம்.இவ்வீட்டுத்திட்டத்தை அமைப்பதற்காக குறித்த காணியை எனது பங்களிப்புடன் பெற்றுக்கொடுத்து எமது மக்கள் கடந்த காலங்களில் பட்ட துன்பங்களுக்கு ஆறுதல் அளித்துள்ளேன்.யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிற்கு தற்போது புதிய மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுவது பெரும் ஆறுதலாக உள்ளது.அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது.

இதற்கெனத் தனியார் காணிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் கீழான நீண்ட கால இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றும் அமைச்சு நிதிகளையும் ஒதுக்கியது.சொந்த இடங்களில் மீளக் குடியேற விருப்புடைய இம்மக்கள் அடிக்கடி பதிவுகளை மேற்கொண்ட போதிலும் அரச காணிகள் கிடைக்காததால் அலைக்கழிவது குறித்தும் அமைச்சர் ரிஷாட் பிரதமரின் கவனத்திற்கு நான் கொண்டு சென்றிருந்தேன்.இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு முஸ்லிம்களை மீள் குடியேற்றத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அங்கீகாரம் கடந்த காலங்களில் வழங்கியது.

இந்த சிறு முயற்சிக்கு நீண்டகாலமாக இடம்பெயர்ந்த யாழ் முஸ்லீம் மக்களை விரைவாக மீள்குடியேற்ற பொறிமுறை ஒன்றினை தயாரிப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சுப்பதவி இன்றியமையாத ஒன்றாகும்.2010ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 9 வருடங்களாக நான் எமது மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளில் நான் கவனம் செலுத்தி வருகின்றேன் இதற்கு எமது மக்கள் சாட்சியாக இருக்கின்றார்கள்.தற்போது எமது கட்சித்தலைவர் றிசாட் பதியுதீன் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த அகதிகளை குடியேற்றல் என்ற அமைச்சினை பெற்று இந்த அமைச்சு ஊடாக எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்திலே பல பராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தமக்கான அதிகார எல்லைகளைக் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் அமைச்சர் றிசாத் மட்டுமே எல்லை கடந்து எமது மக்களுக்காக அன்று தொடக்கம் இன்று வரை குரல் கொடுக்கின்றார்.உதவுகின்றார். இதனை நாம் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். கடந்த காலங்களில் பல மீள்குடியேற்றத்திற்கான நடமாடும் சேவைகள் அவர் முயற்சியினால் நடைபெற்றன.இன்னும் அமைச்சர் ஊடாக இங்கு இடம்பெற என்னால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்நடமாடும் சேவை யாழ் முஸ்லிம் சமூகத்தின் எல்லா தரப்பினருடையதும் பங்களிப்போடு இடம்பெறும். வீட்டுத்திட்டம் காணியற்றோரது பிரச்சினைகள் வாழ்வாதாரம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து நாம் தற்போது தீவிர கவனம் செலுத்துகின்றோம். அத்தோடு யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை சீரழிப்பதற்காக எமது மக்களை வைத்து வாக்குவேட்டை அரசியல் செய்வதற்கு ஒருசிலர் கனவு காண்கின்றார்கள் இதில் நாம். மிகவுமே நிதானமாக செயற்பட வேண்டும்என கேட்டுக்கொண்டார்.
றிசாட் பதியுதீன் மேற்கொண்ட துரித முயற்சியினால் யாழ் முஸ்லீம்களுக்கு 250 வீடுகள்..! றிசாட் பதியுதீன் மேற்கொண்ட துரித முயற்சியினால் யாழ் முஸ்லீம்களுக்கு 250 வீடுகள்..! Reviewed by NEWS on October 03, 2019 Rating: 5