மு.காவுடன் பேசியது உண்மை - எல்லாக் கட்சியுடனும் பேசுகின்றேன் : உதுமாலெவ்வை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் முதல் கட்டமாக எமது தரப்பினர் கட்சித் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் சந்தித்துப் பேசியது உண்மையே என தேசிய காங்கிரஸின் முன்னாள் பிரதித் தலைவரான கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ்.உதுமாலெவ்வை  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அம்பாறை மாவட்டத்தின் தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்களாகவிருந்த நூற்றுக் கணக்கானோர் எனது தலைமையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் அந்தக் கட்சியிலிருந்து வெளியியேறியிருந்தோம்.

இந்த நிலையில், நாம் எதிர்காலத்தில் எந்தக் கட்சியுடன் இணைந்து எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பிலும் ஆராய்ந்து கொண்டிருந்தோம். அனைத்து தேசியக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் நாம் வெளிப்படையான விருப்பத்தைத் தெரிவித்திருந்தோம். இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக எமது தரப்பிலிருந்தும் 15 பேர் கொண்ட குழுவையும் நாம் தெரிவு செய்திருந்தோம்.

இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற தேசியக் கட்சிகளும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தன.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எங்களுடன் பேச வேண்டுமென நீண்ட காலமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. இறுதியாக ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தியது. இருப்பினும் எமது வேலைப்பளு காரணமாக உடனடியாக அந்தக் கட்சியை எம்மால் சந்திக்க முடியவில்லை.

இது இவ்வாறிருக்க, நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டுமல்லாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் எம்மைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியிருந்தன.

இந்த நிலையில், எமது 15 பேர் கொண்ட குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை மட்டக்களப்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். மு.காவுடனான சந்திப்பின் முதலாவது கட்டமே நேற்று முடிவடைந்துள்ளது. மீண்டும் ஒரு தடவை அமைச்சரைச் சந்தித்து எமது குழு பேசவுள்ளது. எனவே எமது குழுவினரால் தீர்மானிக்கப்படும் கட்சியில் நானும் இணைந்து செயற்படவுள்ளேன்.

இதேவேளை, நாம் இணைந்து செயற்படவுள்ள கட்சி எம்மால் முன்வைக்கப்படும் முஸ்லிம் சமூகம்சார்ந்த விவகாரங்கள், பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற எமது தரப்புக் கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் நாம் திடமாக உள்ளோம் என்றும் உதுமாலெவ்வை தெரிவித்தார்.

மெட்ரோ நியூஸ்
மு.காவுடன் பேசியது உண்மை - எல்லாக் கட்சியுடனும் பேசுகின்றேன் : உதுமாலெவ்வை மு.காவுடன் பேசியது உண்மை - எல்லாக் கட்சியுடனும் பேசுகின்றேன் : உதுமாலெவ்வை  Reviewed by NEWS on October 14, 2019 Rating: 5