முஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மகிந்தவை ஆதரியுங்கள் - கருணா..!


தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஒரு ஆட்சியை வழங்க அபிவிருத்திகளின் நாயகன் மகிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்னும் உறுதியாக முடிவு எடுக்கவில்லை, தளம்பல் நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றார்கள். இது தொடர்பாக இரா.சம்பந்தன் ஐயா பல தடவை தெளிவாக கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியினை நம்பி, ஒவ்வொரு தீபாவளி பொங்கலுக்கும் தீர்வு பெற்றுத்தருவேன் என கூறி வந்தவரை நல்லாட்சி அரசாங்கம் முற்று முழுதாக ஏமாற்றிவிட்டதால் இந்த தேர்தலின்போது நிச்சயமாக அவர் கூறமாட்டார்.

இதற்குப் பிறகும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போகின்றோம் என்பார்களேயானால் உண்மையில் மக்கள் தகுந்த பாடம் தேர்தல் முடிவுகளின் போது புகட்டியிருப்பார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதென்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதேவேளையில் இருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சஜித்துக்கே ஆதரவு வழங்கவுள்ளனர்.

சஜித்துடன் சேர்ந்து தமிழ் மக்களை குழி தோண்டிப் புதைக்கப் போவார்களாக இருந்தால் அரசியல் ரீதியாக பாரிய விளைவுகளை கூட்டமைப்பினர் சந்திக்க நேரிடும். சஜித்தின் வரலாற்றுப் பின்னணியை கூட்டமைப்பினர் புரட்டிப் பார்க்க வேண்டும்.

தோணி தாட்ட மடு படுகொலை, பல்கலை படுகொலை, ஓட்டமாவடி பாலத்திற்குள் வெட்டிப் போட்டவை உட்பட பல்வேறு படுகொலையினை தொடக்கி வைத்தவர் சஜித்தின் தந்தையே என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் கூட்டமைப்பினர் நிதானமாக சிந்திக்க வேண்டும். சஜித்தைப் பொறுத்த வரையில் சர்வதேசத்தின் அறிமுகமோ, ஆதரவோ அற்றவர். இவர் வந்து எதனை சாதிக்கவுள்ளார். தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்காது. இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதை நிச்சயமாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன நலலாட்சி என்ற போர்வையில் இற்றைவரை எதுவுமே செய்யவில்லை. கேவலம் 134 அரசியல் கைதிகளில் ஒருவரைக்கூட விடுதலை செய்ய இயலாத கையாலாகதவர்களாகவே முண்டுகொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

மகிந்த ஆட்சியில் இருக்கும்போது 12,000 போராளிகளை புனர்வாழ்வளித்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம். அவையெல்லாம் ஒரு குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்பட்டவை.

அது மாத்திரமல்ல மைத்திரி ஜனாதிபதியானதும், ரணில் பிரதமரானதும் அரசியல் சீர்திருத்தத்தை நூறு நாட்களில் திருத்தி எழுதுவோம் உட்பட பல்வேறு அறிக்கைகளை சுமந்திரன் நாளுக்கு நாள் விட்டிருந்தார்.

இற்றைவரை தமிழர்களுக்காக எதுவுமே நடக்கவில்லை. மாறாக அண்மையில் 52 நாள் ஆட்சி மாறியபோது கூட முண்டுகொடுத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் இன்று ஆட்சியே நாற்பது நாட்களுக்குள் முடிவுறவுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் முஸ்லிம் பயங்கரவாதிகளால் ஏப்ரல் 21ஆம் திகதி நடந்தேறிய குண்டுவெடிப்பு தாக்குதலில் தமிழர்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

முஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி தமிழ் மக்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்கக்கூடிய அரசாங்கத்தை கொண்டு வர வேண்டும்.

அந்த வகையில அபிவிருத்திகளின் நாயகன் மகிந்த ராஜபக்சவினால் மாத்திரமே இது முடியும். மகிந்த வேட்பாளராக நிறுத்தும் ஒருவரையே கொண்டுவந்து நல்லதொரு ஆதரவை தமிழ் மக்கள் கொடுக்க வேண்டும்.

அதே போல் தமிழ் மக்களிடம் அன்பாக கேட்டுக்கொள்வது யாதெனில் பொதுவாக கிழக்கு மாகாணம் அழியும் தறுவாயிலுள்ளது. இந்த அழிவுகளில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்கு மீளவும் மகிந்த தரப்பினர் ஆட்சிக்கு வரவேண்டிய தேவையுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மகிந்தவை ஆதரியுங்கள் - கருணா..! முஸ்லிம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மகிந்தவை ஆதரியுங்கள் - கருணா..! Reviewed by NEWS on October 14, 2019 Rating: 5