கிரான், புணாணை சாளம்பன்சேனை முஸ்லிம்களை வெளியேற உத்தரவு..!(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை சாளம்பன்சேனை பகுதியில் பல வருடங்களான வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை வெளியேறுமாறு கிரான் பிரதேச செயலகம் அறிவுறுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் வாழ்ந்து ஆரம்ப காலத்தில் வாழ்ந்து வரும் மூன்று குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறும், குறித்த இடத்தினை கிராம சேவகரிடம் ஓப்படைக்குமாறும் கோரி கிரான் பிரதேச செயலாளரின் ஒப்பத்துடன் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது.

புணாணை சாளம்பன்சேனை பகுதியில் எனக்கு நான்கு வயது இருக்கும் போது எனது அம்மாவுடன் இங்கு வந்து குடியேறியதாகவும், இங்கேயே நான் திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது எனக்கு அறுபத்தி ஒரு வயது என முகம்மது காசிம் பாத்துமுத்து தெரிவித்தார்.

அத்தோடு 1990ம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் எனது அம்மாவான இப்றாலெப்பை ஆமினா உம்மா மற்றும் எனது தம்பி முகம்மது காசிம் ஆதம்லெப்பை ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பிற்பாடு பயத்தின் காரணமாக இடம்பெயர்ந்து ஓட்டமாவடிக்கு சென்றோம்.

நிலைமை சீரான பின்னர் 2002ம் ஆண்டு மீள குடியேறி எனது நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் 2004ம் ஆண்டு விடுதலைப் புலிகள் பிரிந்ததன் பிற்பாடு ஏற்பட்ட கலவரத்தினால் மீண்டும் நாங்;கள் ஓட்டமாவடிக் சென்றோம். எங்ளோடு ஆரம்ப காலத்தில் இருந்த வந்த தமிழ் குடும்பங்களும் இடம்பெயர்ந்து சென்றனர்.

அதன்பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நல்லாட்சி காரணமாக 2015ம் ஆண்டு மீள குடியமர்ந்து எங்களுக்கு மறைந்த ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் கட்டி தரப்பட்ட வீடுகள் முற்றாக சேதமாக்கப்பட்டு காணப்பட்டிருந்த நிலையில் நாங்கள் இங்கு வீடுகள் அமைந்து மின்சாரம் பெற்று தோட்டங்கள் அமைந்து வாழ்ந்து வருகின்றோம்.

நாங்கள் இங்கு வாழ்ந்து வந்தமைக்கான ஆதாரமான எங்களது வாக்குரிமை, எங்களது பிள்ளைகளின் பிறப்பு பதிவு, காணி கச்சேரி ஆவணம், அடையாள அட்டை, ஜனசக்தி உதவி உட்பட்ட பல ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. இவ்வாறு இருந்துள்ள நிலையில் தற்போது கிரான் பிரதேச செயலாளரால் எங்களை குறித்த இடத்தில் இருந்து வெளியேறுமாறு மகஜர் ஒட்டப்பட்டுள்ளது.

நாங்கள் பலகாலமாக வாழ்ந்து வந்த இடத்தினை விட்டு வெளியேறினால் நாங்கள் எங்கு செல்வது. எங்களது இறுதி மூச்சு இருக்கும் வரை நாங்கள் இங்குதான் இருப்போம். இல்லையென்றால் எங்களை கொலை செய்து விட்டு எங்களது காணியை பெற்றுக் கொள்ளுங்கள் என்கின்றனர்.

அத்தோடு குறித்த பகுதியில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். ஆனால் சில அரச அதிகாரிகள் மாத்திரம் எங்களை பிரித்தாலும் வகையில் செயற்படுகின்றனர் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனது மனைவியின் தந்தை வாழ்ந்த இடத்தில் நான் திருமணம் செய்த பின்னர் இங்கு யானைகளின் அட்டகாசங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக இஸ்மாலெப்பை ராஜ்தீன் (வயது 32) என்பவர் தெரிவித்தார்.

நான் திருமணம் செய்ததன் பிற்பாடு எனக்கும் எனக்கு மனைவியின் சகோதரிகள் மூவருக்கும் குறித்த காணியை வழங்கினார். ஆனால் இங்கு வந்து பார்த்த போது முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் கட்டடப்பட்ட வீடு சேதமடைந்து காணப்பட்டது.

அதன்பிற்பாடு நான் தற்காலியமாக வீடு ஒன்றை அமைத்து இங்கு வாழ்ந்து வந்தேன். அத்தோடு குறித்த பகுதியில் யானை தொல்லை அதிகம் இருக்கும் போதும், எனக்கு இருக்க வீடு இன்மையால் எனது குடும்பத்துடன் இங்கு வாழ்ந்து வருகின்றேன்.

தற்போது வாழ்ந்து வரும் நிலையில் கிரான் பிரதேச செயலகம் எங்களை இங்கிருந்து வெளியேறுமாறு கோருகின்றனர். எனது மாமா பல வருடங்கள் வாழ்ந்த காணியில் வாழும் எங்களை வெளியேறச் சொன்னால் நாங்கள் எங்கு செல்வது, எங்களால் இவ்விடத்தினை விட்டு வேறு இடங்களுக்கு செல்ல முடியாது என்றார்.

சாளம்பன்சேனை பகுதியில் எங்களோடு குறித்த மூன்று குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக எங்களோடு இவர்களும் இடம்பெயர்ந்து தற்போது நாங்கள் மீள குடியேறியதை அறிந்து இவர்களும் மீள குடியேறியுள்ளனர். ஆனால் எங்களுக்கு இதுவரை எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை என சுப்பிரமணியம் சிவமணி (வயது 73) தெரிவித்தார்.

எனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வினை அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பெற்றுத் தருமாறு குறித்த மூன்று முஸ்லிம் குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிரான், புணாணை சாளம்பன்சேனை முஸ்லிம்களை வெளியேற உத்தரவு..! கிரான்,  புணாணை சாளம்பன்சேனை முஸ்லிம்களை வெளியேற உத்தரவு..! Reviewed by NEWS on October 03, 2019 Rating: 5