திசைகளுக்குள் வரையறுக்கப்படும் தமிழ் தேசியம்..!!!- சுஐப் எம். காசிம் -

தமிழர் தரப்பு ஆதரவை அதிகமாகக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிளவுபட்டுள்ள இக்கட்சியின் சமீபகால காய் நகர்த்தல் மேலும் விரிசல், விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. புலிகளின் நிர்ப்பந்தத்தால் உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பு, தாயகக் கோட்பாடுகளின் சிந்தனைகளைச் சிதைத்துச் செயற்படுவதாகவும் வடக்கு, கிழக்கு இணைப்பின் அவசியத்தை வலுவற்றதாக்கும் முயற்சிகளில் காலடி வைத்துள்ளதென்பதும் தமிழர் தரப்பின் ஒரு பகுதியினரது புதிய நிலைப்பாடு.

தெற்கில் சிங்கள, பௌத்தர்கள் மத்தியில் அரசியல் விழிப்பு ஏற்பட்டு, பௌத்த தேசத்தின் இருப்புக்கு மேலாதிக்கவாதிகள் உரமூட்ட முனையும் இந்தக் காலகட்டத்திலா வடக்கு, கிழக்கிற்கு வௌியிலும் போட்டியிடுவதென்பது இன்னும் சிலரது ஆதங்கம். 

இவ்வாறு பல்முனைத் தாக்குதலுக்குட்பட்டுள்ளது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. உண்மையில் தமிழர் தாயகத்துக்கு வௌியில் போட்டியிடும் அவசியம் கூட்டமைப்புக்கு ஏன் ஏற்பட்டிருக்கும்? ஐம்பது வருடங்களாக வட, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக அஹிம்சை, சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்த விடுதலைச் சிந்தனைகளை தமிழ் இளைஞர்கள் மத்தியில் விதைத்த, இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய யோசனைகள், நாட்டிலுள்ள சகல தமிழர்களையும் வடக்கு,கிழக்குத் தேசியத்துக்குள் உள்வாங்குவதா?அல்லது வடக்கு, கிழக்கு தமிழ்த் தேசியத்துக்கு தென்னிலங்கையிலுள்ள தமிழர்களதும் அங்கீகாரம், ஆதரவைப் பெற்றுக்கொள்ள முயல்வதா? மேலும், தென்னிலங்கை தமிழர்கள் எதிர்கொள்ள நேரிடும் பேரினவாத அச்சுறுத்தல்களுக்கு குரல் எழுப்பி அபயமளிப்பதா? இவைகளே இக்கூட்டமைப்பின் புதிய சிந்தனைகளாக இருக்கலாம். ஆனால், இச்சிந்தனைகள் வெற்றியளிப்பது தென்னிலங்கையின் இன்றைய எழுச்சியில் சந்தேகத்துக்குரியதே. 

தென்னிலங்கையின் சிங்களச் சனச்செறிவுக்குள்ளும் தொடர்ச்சியாகவுள்ள பௌத்த கிராமங்கள் மத்தியிலும் சிதறி சிறுபான்மையாக வாழும் தமிழர்கள், தங்களுக்கான தனித்துவ அடையாளத்தை நிரூபிக்க விரும்பிய சந்தரப்பங்கள் மிகவும் அரிது. நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரங்கள், அதற்குப்பின்னரான போராட்டங்கள், தனித்துவ கட்சிகளூடாக பிரதிநிதியைப் பெறுமளவிற்கு வாக்குப்பலம் இல்லாதமை, அவ்வாறு இருந்தாலும் தென்னிலங்கை தமிழர்கள் இதுபற்றி விழிப்பின்றி இருந்தமை, மேலும் எந்தச் சந்தர்ப்பங்களிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டித் தீர்வு வலியுறுத்தப்பட்டமை, இதனால் தென்னிலங்கை தமிழர்கள் பெரும்பான்மை சிங்களச் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டமை போன்ற காரணங்களே இந்நிலைமைகளை ஏற்படுத்தியிருந்தன.

கள யதார்த்தங்கள் இவ்வாறிருக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரலாற்றில் முதற்தடவையாக தென்னிலங்கையிலும் களத்தில் குதிப்பது குதிரைக் கொம்பாகுமா? இவ்வாறு குதிக்கச் சாத்தியமான மாவட்டங்கள் எவை? சுமார் ஆறு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் தென்னிலங்கையில் வாழ்ந்தாலும், தென்னிலங்கையைத் தளமாகக் கொண்டு ஒரு தனித்துவ கட்சி நிலைத்ததில்லையே? மனோ கணேசனின் மேலக மக்கள் முன்னணி, பிரபா கணேசனின் கட்சிகள் அடையாளத்துக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் தனித்துப் போட்டியிட்டதில்லை. பெருந்தேசிய கட்சிகளில் போட்டியிட்டே இவர்கள் பாராளுமன்றம் செல்ல நேரிடுகிறது. எனவே கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம்,ஆகிய மாவட்டங்களில்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முயன்று பார்க்க வேண்டும். இன்னொருபுறம் இம்முயற்சிகள் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளை வீழ்த்தி, மாவட்ட வெற்றிக்கான வாய்ப்புக்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இலகுபடுத்தலாம்.

மேலும், வடக்கு - கிழக்கை மாத்திரம் மட்டுப்படுத்தியிருந்த தமிழர் தரப்பு அரசியல் வியாபித்து, தெற்கிலும் சமஷ்டியைக் கோரும் நிலை ஏற்பட்டுள்ளதாக, முன்னெடுக்கச் சாத்தியமான பிரசாரங்கள் சிங்களச் சமூகத்தை திகிலூட்டலாம். இந்நிலைமைகள் 150 ஐப் பெறும் இலக்குகளையும் இலகுவாக்கும். 

இதில் இன்னொரு பக்கமும் உள்ளது. வடக்கு, கிழக்குத் தாயகத்துக்கான யோசனைகள் சில வேளைகளில் தென்னிலங்கை தமிழர்களுக்குப் பொருந்தாததாகி எதிர்க்கும் நிலையும் ஏற்படும். இது தொப்புள்கொடி உறவுகளின் உரிமைகளை எதிர்ப்பதாக அர்த்தப்படாது. இனவாதச் சீண்டல்களிலிருந்து தப்பிக்கும் அபயங்களாகவும் உபாயங்களாகவுமே இவ்வெதிர்ப்பை நோக்க வேண்டும். 

ஒருகாலத்தில் நாட்டிலிருந்த இந்திய அமைதிப்படை வௌியேறக் கூடாதென வட - கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் வௌியேற வேண்டுமென அதே முஸ்லிம் காங்கிரஸின் தென்னிலங்கை மாகாண சபை உறுப்பினர்களும் வாக்களித்தமை நினைவுக்கு வருகிறது. இந்நிலைமைகளால் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபும் தடுமாறியிருந்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தால் இலங்கை இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு, வடக்கு - கிழக்கில் ஆயுதக் குழுக்கள் சுதந்திரமாகத் திரிந்ததால் ஏற்பட்ட அச்சுறுத்தல்களில் தப்பிக்க, முஸ்லிம்களுக்கு இப்படையினரின் பாதுகாப்புத் தேவைப்பட்டது. இதேவேளை இலங்கையின் ஒருமைப்பாடு இந்திய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கையில் தோன்றிய அச்சத்துக்கு ஆதரவளித்து, தேசப்பற்றை நிரூபிக்கும் பொறுப்பு தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருந்தது. மேலும் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் தனியலகு கோருவதை விரும்பாத தென்னிலங்கை முஸ்லிம்கள், தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவளித்து, சிங்களவர்களின் சந்தேகங்களிலிருந்து அடைக்கலம் பெற விரும்பினர். எனவே இவை அனைத்தும் பிரதேச அரசியலின் பௌதீக வேறுபாடுகளால் ஏற்படும் பேதங்களாகவே உள்ளன. 

ஒரு காலத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியும், தமிழ் காங்கிரஸும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஒதுங்கியதும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பிரியாவிடை கொடுத்து மர்ஹூம் அஷ்ரஃப் தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கியதும் பிரதேசங்களின் பௌதீக வேறுபாடுகளால் ஏற்படும் அரசியல் வேறுபாடுகளாலேயோ என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. 

எனவே, தென்னிலங்கையில் போட்டியிட விரும்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதை எதிர்பார்க்கிறதோ தெரியாது. “ஒருவேளை நாட்டை நாங்கள் பிரிக்கவில்லை. நாடு முழுவதுமுள்ள தமிழர்கள் இனவாதச் சீண்டல்களின்றி வாழும் அதிகாரத்தையே கோருகிறோம்” என்பதை நிரூப்பிக்கும் புதிய நடைமுறைகளோ அதுவும் தெரியாது.
திசைகளுக்குள் வரையறுக்கப்படும் தமிழ் தேசியம்..!!! திசைகளுக்குள் வரையறுக்கப்படும் தமிழ் தேசியம்..!!! Reviewed by NEWS on January 04, 2020 Rating: 5