பிரதான செய்திகள்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஏமாற்றத்தை அளிக்கின்றது - ஹக்கீம்.பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடாத்திய கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் வழங்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி அலரிமாளிகையில் பிரதமர் கூட்டிய கட்சித்தலைவர்களின் கூட்டம் தொடர்பில் மு.கா தலைவர் ஹக்கீம் மேலும் கூறியுள்ளதாவது

பிரஸ்தாப ஒன்றுகூடல் ஏமாற்றத்தை அளித்தது. எதிர்பார்த்தவாறே கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர.டி.சில்வா மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோர் சுய பிரதாபங்களை வெளியிட்டதை காணக்கூடியதாக இருந்தது. 

நிலைமை சிறப்பாக கையாளப்பட்டதா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. சில தீர்மானங்களைப் பொறுத்தவரை அவை அரசாங்கத்தின் ஆரம்ப வினைத்திறனில் இருந்த குறைபாடுகளையும், தாமதித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களின் எண்ணிக்கையை தற்போதைய தொகையான 600 இலிருந்து அரசாங்க வைத்தியசாலைகளில் மேலும் 100 கட்டில்களால் அதிகரிக்க உள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சர் கூறினார். 

அவை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்தினோம். சந்தேகத்துக்குரிய நோயாளர்களிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அரசாங்க மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மட்டுமல்லாது , மேலதிகமாக மூன்று மருத்துவ பீடங்களில் காணப்படும் வசதிவாய்ப்புக்களையும் அவற்றுக்காக பயன்படுத்துவது பற்றியும் அங்கு எடுத்துக்காட்டப்பட்டது. 

அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்வோரின் அவல நிலை பற்றி சுட்டிக்காட்டி ஊரடங்குச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான மாற்று ஏற்பாடுகளின் தேவை வலியுறுத்தப்பட்டது.

நான் கருத்துத்தெரிவிக்கின்ற சந்தர்ப்பத்தில், இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அவசரமானவேளையில் நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படுகின்றோம், என்பதை எடுத்துக்காட்டும் வகையில் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி நிவாரண உதவிகள், சட்டவாக்கம் உட்பட முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வழிவகுக்க வேண்டியுள்ளதை வலியுறுத்தியபோது, சுமந்திரனும் அதனோடு உடன்பட்டார். ஆனால் உதய கம்மன்பிலவும், விமல் வீரவன்சவும் அவர்களது கைங்கரியத்தில் நாங்கள் பங்கேற்க தேவையில்லை என ஆக்ரோஷமாக எதிர்த்தனர்.

நாடு சர்வாதிகார போக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கத்தக்கதாக, விளைவுகள் மோசமாகுமானால் வீராப்புப் பேசும் இந்த இருவரும் அதற்கான பொறுப்பை ஏற்பார்களா? 

இதேவேளையில், பாராளுமன்ற தேர்தலை காலவரையரையின்றி பின்போடுவதாக தெரிவிக்கும் தேர்தல் ஆணையாளரின் அறிவித்தல் சட்டவலுவற்றது.

புதிய பாராளுமன்றம் மே மாதம் 14 ஆம் திகதி கூடவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள வர்தமானி அறிவித்தலும் இன்னும் இருந்து வருகின்றது.

இவ்வாறிருக்க, இன்றுள்ள இக்கட்டான, ஆபத்தான சூழ்நிலையில் தேர்தலைப் பற்றிச் சிந்திக்க கூடிய மனநிலையில் மக்கள் இல்லை. அரசியல் அமைப்புக்கு புறம்பான சில நடவடிக்கைகள் ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக ஆக்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget