கொரோனா வைரஸ் பாதிப்பால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இந்தியாவின் மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து தங்கள் சொந்த ஊரான மத்திய பிரதேசத்தில் உள்ள சத்னாவிற்கு சகுந்தலா என்ற நிறைமாத கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவர் ராகேஷ் கவுலும் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகளும் நடத்தே சென்றுள்ளனர்.
நாசிக்கில் இருந்து சத்னா சுமார் 1050 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் நடந்து சென்றுகொண்டிருந்த வழியிலேயே சகுந்தலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது.
வீதியின் ஓரத்தில் ஒதுங்கியபடி குழந்தை பெற்றெடுத்து இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் 160 கிலோமீட்டர் நடந்து சென்றதாக சகுந்தலாவின் கணவர் கூறியுள்ளார்.
நாட்டின் கொரோனா வைரஸ் பூட்டுதல் பணம் சம்பாதிக்க எந்த வழியும் இல்லாததாலும் வாழ இடம் இல்லாத காரணத்தாலும் குறித்த குடும்பத்தினர் நாசிக்கை விட்டு வெளியேறியதாக மத்திய பிரதேசத்தின் அதிகாரி கவிதா கனேஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் சொந்த மாநில சோதனைச் சாவடியை அடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் (மே 5) குழந்தை பிறந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து தற்போது சகுந்தலாவை தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்துக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கனேஷ் கூறினார்.
இதேவேளை இந்தியாவின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்திய நகரங்களை விட்டு வெளியேறி தங்கள் கிராமங்களுக்கு திரும்புவதாக கூறப்படுகின்றது.
அங்கு பொதுப் போக்குவரத்தை பரவலாக மூடியதால், அவர்கள் தமது பயணங்களை நடந்து மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும் அமெரிக்காவின் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி, இந்தியாவில் இதுவரை 78,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் 2,551 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.