கொரோனா சந்தேகம் : வெலிகமவில் வபாத்தான ஷரீபத்துந் நிசாவின் ஜனாஸா இன்று நல்லடக்கம்.


வெலிகமவில் நேற்று -07- வபாத்தான திருமதி ஷரீபத்துந் நிசா எனும் பெண்மணியின் ஜனாஸா அலிஸாஹிர் மௌலானா அவர்களது நேரடி தலையீட்டினால் இன்று 08.05.2020 விடுவிப்பு.


வெலிகம , புதிய தெரு என்னும் முகவரியினையுடைய 54 வயதான திருமதி நியாஸ் (அப்துல் காதர் ஷரீபத்துந் நிசா) என்னும் பெண்மணி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காத நிலையில் வைத்தியரின் பரிந்துரையுடன் வீட்டுக்கு கொண்டுசென்ற நிலையில் நேற்று(07-05-2020 வியாழன்) காலை 6.30 மணியளவில் மரணமானார். 

பின்னர், நேற்று அவரது ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கையில், சுமார் 10.30 மணியளவில் அவர்களது வீட்டுக்கு வந்த வெலிகம பொலிஸ் தலைமையக மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினைச் சேர்ந்த குழுவினர் இந்த மரணம் கொரோனா தொற்றினால் ஏற்பட்டதாக தாம் சந்தேகிப்பதாகவும் ஜனாஸாவை கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்யவேண்டும் எனக் கூறி மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள். 

மரணித்த பெண்மணி கடந்த 16 வருடங்களாக சீனி நோய், மற்றும் இரத்த அழுத்தம் போன்ற வியாதிகளால் பீடிக்கப்பட்டிருந்தமையே மரணத்துக்கு காரணம் என்று குறித்த வைத்தியரும், வைத்தியசாலையின் வைத்திய வரலாற்று அறிக்கைகைகளும் தெளிவாக கூறியிருக்க இப்படியான வருந்தத்தக்க சம்பவம் நடந்திருக்கிறது. 

இனவாதத்தினை எண்ணெய் ஊற்றி வளர்க்கும் ஊடகங்களான தெரண, ஹிரு போன்றவை இன்னுமொரு ''கொரோனா மரணம்'' வெலிகமவில் முஸ்லீம் குடும்பமொன்றில் சம்பவித்துள்ளது என செய்திகளை பரப்பத் தொடங்கியதை அடுத்து அந்தப் பிரதேசம் முழுவதும் முடக்கப்படக்கூடிய ஒரு பதற்றநிலை உருவாக்கப்பட்டிருந்தது..

இதனை கேள்வியுற்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா மரணித்த பெண்மணியின் கணவருடன் பேசி விடயங்களைத் தெரிந்துகொண்டார். 

ஈற்றில் எப்படியும் ஜனாஸாவை எரித்துவிடுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுவதை உணர்ந்த அலிஸாஹிர் மௌலானா மிகவும் கவலையுற்றவராக , இந்த முயற்சியை எப்படியும் முறியடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில், ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வெலிகம நகரசபைத் தவிசாளர் ரெஹான் ஜெயவிக்ரம அவர்களைத் தொடர்புகொண்டு கலந்துரையாடினார். விடயத்தின் தீவிரத்தையும் , உண்மைத் தன்மையையும் தெளிவுபடுத்தினார்.வெலிகம பிரதேச முஸ்லீம் மக்களுடன் சினேகபூர்வ தொடர்புகளை பேணிவரும் தவிசாளர் ரெஹான் ஜெயவிக்ரம , குறித்த பொதுச் சுகாதார பரிசோதகரகள் மற்றும் இது தொடர்பான ஏனைய அதிகாரிகளுக்கும் தொடர்பினை ஏற்படுத்தி விடயத்தினை தெளிவுபடுத்தினார். அத்துடன் நாளை தானே நேரடியாக களத்தில் இறங்கி, ஜனாஸாவை விடுவித்து இஸ்லாமிய முறைப்படி ஜனாஸாவை அடக்கம் செய்ய ஆவண செய்வதாக உறுதியளித்தார்.

அலிஸாஹிர் மௌலானா மற்றும் ரெஹான் ஜெயவிக்ரம ஆகியோர் மாத்தறை வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் திருமதி மெதிவக்க அவர்களைத் தொடர்புகொண்டு ஜனாஸாவை அவசரமாக நல்லடக்கம் செய்யும் வகையில் உடனடியாக விடுவிக்க விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக ஜனாஸா வெலிகமவிலுள்ள அவர்களின் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜனாஸா இஸ்லாமிய மார்க்க விதிமுறைகளுக்கமைய நடைபெற்று முடிந்தது..
கொரோனா சந்தேகம் : வெலிகமவில் வபாத்தான ஷரீபத்துந் நிசாவின் ஜனாஸா இன்று நல்லடக்கம். கொரோனா சந்தேகம் :  வெலிகமவில் வபாத்தான ஷரீபத்துந் நிசாவின் ஜனாஸா இன்று நல்லடக்கம். Reviewed by ADMIN on May 08, 2020 Rating: 5