(நா.தனுஜா)
நாட்டில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாத செயற்பாடுகள் மிகவும் அருவருக்கத்தக்கவை என்பதுடன், கௌதம புத்தரின் உன்னத போதனைகளுக்கும் முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
எமது சமூகத்தில் தொடக்க நிலையிலுள்ள இனவாதமானது எமது தாய்நாட்டின் மக்கள் மத்தியில் இன, மத, சமூகப்பிரிவினைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இது எமது தேசிய நலனுக்கு எதிரானதும் அதற்குக் குந்தகம் விளைவிப்பதும் ஆகும்.
மனிதத் தன்மைக்கும், உயர் மனித விழுமியங்களுக்கும் கூட அது எதிரானது. எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாத செயற்பாடுகள் அருவருக்கத்தக்கவை. நம் அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டியவை.