ரணசிங்க பிரேமதாசவின் யுகத்தை மீண்டும் உருவாக்குவேன்


மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் யுகத்தை மீண்டும் உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கரங்களை பலப்படுத்துங்கள் எனத் தெரிவித்த என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை உண்டாக்கி அதன்மூலம் தமது அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக முன்னெடுக்கும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என்றும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (18) இரவு புத்தளம் குதா பள்ளிக்கு அருகாமையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹெக்டர் அப்புஹாமி, சாந்த அபேசேகர, நிரோஷன் பெரேரா மற்றும் சட்டத்தரணி சித்ரால் பர்னான்டோ, விக்டர் அண்டனி, கோகுல்நாத் சிங், ஏ.சி.சலாஹூதீன், கிங்ஸ்லி லால், காமினி வடிகமங்காவ உள்ளிட்ட பிரதேச சபை, நகர சபை உறு;பபினர்கள், கட்சியின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில், இன்று இந்த நாட்டில் அடிப்படைவாதம், மதவாதம் மற்றும் இனவாதம் என்பன தலைவரித்தாடுகிறது. இது இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதில் விரிசலை உண்டாக்கியது. எனவே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மலர இருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் அடிப்படைவாதத்திற்கும், மதவாத்திற்கும், இனவாதத்திற்கும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்பதை மிகவும் பொறுப்புணர்வுடன் கூறிக்கொள்கிறேன்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாத குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கை காரணமாக இந்த நாட்டில் வாழும் முழு முஸ்லிம் மக்களின் மனங்களையும் நோவினைப்படுத்தினார்கள். ஒரு குழு இப்படி செய்துவிட்டார்கள் என்பதற்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் நோவினைப்படுத்த முடியாது.

கொரோனாவை இலங்கையில் பரப்பியவர்கள் முஸ்லிம்கள்தான் என்றும் அவர் மீது விரல் நீட்டப்பட்டது. அப்போது அதற்கு எதிராக நான் குரல் கொடுத்தேன். என்னிடமோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியில் பயணிக்கின்றவர்களிடமோ அடிப்படைவாதம், மதவாதம் மற்றும் இனவாதம் கிடையாது.

இந்த பொதுத் தேர்தலில் எல்லா மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் பட்டியலில் அனைத்து இன மக்களையும் பிரதிபலிக்கின்ற வகையில்தான் உறுப்பினர்களை வேட்பாளர்களை களமிறக்கியிருக்கிறோம். இந்த நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் இந்த நாட்டு பிரஜையே என்ற அடிப்படையில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

முதலில் இனவாத சிந்தனையை களைய வேண்டும். நான் இனவாத சிந்தனைக்கு எதிரானவன். எந்தவொரு சமூகமும் இன ரீதியாக , சமய ரீதியாக ஒடுக்கப்படுவதை நான் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். அதற்கு எதிராக குரல் கொடுப்பேன்.

கடந்த நல்லாட்சியில் யாருமே எதிர்பார்த்திராத வகையில் இலங்கையில் பாரிய அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்தினோம் என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். அதுபோல எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அதிகூடிய ஆசனங்களை பெற்று நாமே ஆட்சி அமைப்போம் என்பதில் இரு கருத்துக்கள் கிடையாது. எமது டெலிபோன் சின்னத்திற்கு புள்ளடியிட்டு எங்களுடைய பயணத்தில் நீங்களும் பங்காளியாகுங்கள்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியிடம் தாருங்கள். இங்கு வாழும் அனைத்து இன மக்களும் தமது மதக் கடமைகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படும்.

அடிப்படைவாதம், மதவாதம் மற்றும் இனவாதம் முழுமையாக ஒழிக்கப்படும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் யுகத்தை உருவாக்கிக் காண்பிக்கிறோம். கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை விட அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புத்தளம் மாவட்ட மக்கள் எனக்கு கூடுதலான வாக்குகளை வழங்pக என்னை கௌரவப்படுத்தினார்கள். இதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

ஒரு சிலர் தனித்துப் போட்டியிட்டு தேர்தல் முடிந்த கையுடன் எம்முடன் இணைந்துகொள்ளலாம் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறானவர்களை நாங்கள் ஒரு போதும் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று மிகவும் பொறுப்புணர்வுடன் கூறிக்கொள்கிறேன் என்றார்.
ரணசிங்க பிரேமதாசவின் யுகத்தை மீண்டும் உருவாக்குவேன் ரணசிங்க பிரேமதாசவின் யுகத்தை மீண்டும் உருவாக்குவேன் Reviewed by ADMIN on July 19, 2020 Rating: 5