சுதந்திர கட்சியின் நிலைப்பாடு தெளிவில்லை, அரசியலமைப்பு உருவாக்கம் ஸ்தம்பிதம்

Unknown







             புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தினை முன்வைப்பதற்கு  அக்கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள குழு அறிக்கை சமர்பிக்காமை மற்றும்  ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை முன்வைக்காமை போன்ற காரணங்களால் அரசியலமைப்பு சட்ட வரைவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
          அரசியலமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்களும் அறிக்கைகளை சமர்ப்பித்ததன் பின்னர் கடந்த டிசம்பர் 10ஆம் திகதி கண்காணிப்புக் குழுவின் அறிக்கை முன்வைக்கப்பட்டு ஜனவரி மாதமளவில் அரசியலமைப்பு தொடர்பிலான விவாதம் பாரளுமன்றத்தில் நடைபெற  உத்தேசிக்கப்பட்டிருந்தது.
            ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கும் வகையிலான தீர்மானங்களை உள்ளடக்கிய வரைவொன்று அரசியலமைப்பு கண்காணிப்பு குழுவினால் முன்வைக்கப்பட இருந்தது. இந்நிலையில் அரசியலமைப்பு கண்காணிப்பு குழுவின் தலைவரான பிரதமர், கண்காணிப்பு குழு முன்வைக்கும் எந்தவொரு வரைவுக்கும் ஐதேகா ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
         ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என தெரிவித்திருந்ததுடன்  சுதந்திரக் கட்சிக்கு கருத்து தெரிவிப்பதற்கு பெப்ரவரி 10ஆம் திகதி இறுதி தினமாக வழங்கப்பட்டிருந்தது.
வழங்கப்பட்ட திகதி முடிவடைந்து ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் கழிந்துள்ள போதிலும் சுதந்திக் கட்சி தனது நிலைப்பாட்டினை இதுவரையிலும் முன்வைக்கவில்லை. நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, மஹிந்த சமரசிங்க, சுசில் பிரேமஜயந்த  போன்ற சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களை உள்ளடக்கிய குழு கடந்த தினங்களில் எந்தவொரு கூட்டங்களையும் நடாத்தியிருக்கவில்லை.
          ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தனது நிலைப்பாட்டினை வெளிப்படையாக தெரிவிக்காமையும் அரசியலமைப்பு உருவாக்கத்தினை தாமதப்படுத்தியிருப்பதாக தெரிய வருகிறது. அரசியலமைப்பு தொடர்பான கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் சிலரிடமிருந்து ஜனாதிபதி அவர்கள் அதிகாரப் பகிர்வு பற்றிய தீர்மானமொன்றினை பெற்றுக்கொண்டுள்ள போதிலும் அது தொடர்பில் அவர் முறையானதொரு பதிலை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags
3/related/default