எஸ்.எம்.சன்சீர்
இறக்காமம் பிரதேச மாயக்கல் மலையில் அமைக்கப்படும் புத்தர்
சிலைக்கு எதிராக சிறுபான்மை சமூகங்கள் இணைந்து ஹர்த்தால் மற்றும் பாரிய
கண்டன பேரணியென்றை நாளை வெள்ளிக் கிழமை அம்பாரை மாவட்டம் முழுவதும்
நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இறக்காமம் பிரதேச சபையின்
முன்னாள் தவிசாளர் யு.கே.ஜெபீர் மௌலவி எமது செய்திச் சேவைக்கு தகவல்
தெரிவித்தார்.
சிங்கள பௌத்த மக்கள் வாழாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எமது
புர்வீக காணியில் பௌத்த விகாரை அமைப்பது எந்த விதத்தில் நியாயம் என அவர்
கேள்வியெழுப்பினார். வன்முறை மூலம் ஒரு தீர்வை எட்ட முடியாது என்ற நிலைப்பாட்டை
எமது கட்சி தெளிவாக புரிந்து கொண்டுள்ளதால். பேச்சு வார்த்தை மூலம் இதற்கான
தீர்வை பெறவே முயற்சி செய்து வந்துள்ளது.
அதன் பயனாக சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த அம்பாரை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் மன்சுர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஏ.எல்.தவம்,சுகாதார அமைச்சர் நஸீர் ஆரீப் சம்சுதீன் ஆகியோர் பெரும் பான்மை
சமூகத்தினரோடு நியாயங்களை எடுத்துக் கூறிய போதும் அது பயனளிக்கவில்லை.
அந்தவகையில் இதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாண சபையில் சிலை
அமைப்பதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸால் பிரேரணை கொண்டு வந்து
நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் கிழக்கு மாகாண
ஆளுணரை மிகவும் காரசாரமாக திட்டி சிலை அமைப்பதை உடன் நிறுத்துமாறு
கோரினார்.
இப்படியான ஜனநாயக ரீதீயான முறையில் முயற்சி செய்த போதும்
சாதகமான நிலை தோன்றாத காரணத்தால் மக்கள் போராட்டத்தின் மூலம் அந்த இலக்கை
அடையலாம் என்ற கருத்து நிலவுகின்றது.
அந்த அடிப்படையில் நாளை வெள்ளிக் கிழமை அம்பாரை மாவட்ட
முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை செய்வதோடு ஜும்மா தொழுகையின் பிற்பாடு
கண்டன பேரணியென்றையும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
