அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் வீழ்த்தப்படும்! வட கொரியா எச்சரிக்கை



அமெரிக்காவின் விமான தாங்கி போர்கப்பலை வீழ்த்தி மூழ்கடிக்க நாங்கள் தயார் என வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது. வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

சமீபத்தில் கூட அந்நாடு நடத்திய சோதனை தோல்வியில் முடிந்தது. வட கொரியாவின் செயலுக்கு அமெரிக்க உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும் அதை அந்நாடு கேட்க மறுக்கிறது.

இதனையடுத்து வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதனால் அங்கு போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு போய்ச்சேரும் என தெரிகிறது.

இதற்கு பயப்படாத வட கொரியா அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார் என தற்போது மிரட்டல் விடுத்து உள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், நமது புரட்சிகர படைகள் அணுசக்தியால் இயங்கக்கூடிய அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க நம்மால் முடியும்.

இப்படி செய்வது தனது படை பலத்தை வெளிக்காட்டுவதற்கு ஆதாரமாக அமையும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.