முசலிப் பிரதேசத்திற்கு ஜனாதிபதியின் செயலாளரை 27 ஆம்
திகதி (இன்று) அழைத்து வந்து வர்த்தமானிப் பிரகடனத்தை இரத்துச் செய்ய
நடவடிக்கை எடுப்பதாக மு கா தலைவர் ரவுப் ஹக்கீம் அறிவித்திருந்தார்.
ஜனாதிபதியின்
வர்த்தமானி அறிவிப்பை அடுத்து மறிச்சுக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்னே
நாங்கள் இன்று 31 நாட்களாக நில மீட்புப் போராட்டம் நடத்தி வருகின்றோம்.
முசலிப்
பிரதேச செயலகத்தில் மு க தலைவர் அதிகாரிகளுடன் கூட்டமொன்றை நடத்துவதை
அறிந்து பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் எமக்கு இன்றுடன் தீர்வு
கிடைக்குமென்ற நம்பிக்கையில் அங்கு சென்றோம். கூட்டம் நடந்து
கொண்டிருந்தது. வில்பத்து தொடர்பான வரைபடத்தை பேராசிரியர் ஒருவர்
ஒளிப்படக்கருவியைப் பயன்படுத்தி விளக்கிக் கொண்டிருந்தார். அங்கு
வந்திருந்தவர்களுக்கும் வில்பத்து தொடர்பான அறிமுகத்தை அவர் வழங்கினார்.
இந்த
விடயம் முடிந்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நவவி எழுந்து ஜனாதிபதியின்
செயலாளரை கூட்டி வருவதாக கூறப்பட்டதே, அவர் எங்கே? இங்கு இருக்கிறாரா?
என்று கேள்வியெழுப்பினார்.
ஜனாதிபதியின்
செயலாளர் வரவில்லையென்றால் நாங்கள் வெளிநடப்புச் செய்வதாக அவர் கூறினார்.
பின்னர் முசலிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான நானும் இது தொடர்பில்
பேசிய போது அங்கே வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன.
எங்களை வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது. இது தான் உண்மையான நிலை. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தான் உண்மையான வருத்தம் தெரியும்.
மு
கா தலைவர் ரவூப் ஹக்கீமும் வில்பத்து தொடர்பில் இத்தனை ஆழமான விடயங்கள்
இருக்கின்றது என்பதை இன்று தான் அறிந்திருப்பார் நாங்கள் கூட்டத்தைக்
குழப்பவில்லை. சுமார் 1 மாதங்களுக்கு மேலாக, பசியுடனும் பட்டிணியுடனும்
நீரின்றி வெயிலில் வாடும் எங்கள் மக்களுக்கு தீர்வு கிடைக்க
வேண்டுமென்பதற்காகவே இவ்வாறான போராட்டத்தை நடத்தி வருகின்றோம். எங்களை
முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் ஒரு குழப்பவாதிகளாகக் காட்டி இந்த விடயத்தில்
ஆதாயம் தேடுவதற்கு முயற்சிக்கின்றனர்.
கொழும்பில்
31 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நடந்த
கூட்டத்தில், அவர் இன்னும் 3 நாட்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி ஒரு தீர்வை
தருவதாக கூறியிருந்தார். அந்த உயர்மட்டக் கூட்டத்தில் வன பரிபாலன, வன
ஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயங்கள், நில அளவை திணைக்கள உயர்
அதிகாரிகள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட இந்தப் பிரச்சினையுடன்
தொடர்புபட்ட உயர் அதிகாரிகள் பங்கு பற்றியிருந்தனர்.
ஜம்இய்யதுல்
உலமா, முஸ்லிம் கவுன்சில், ஷூரா கவுன்சில், முஸ்லிம் சட்டத்தரணிகள்
சங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்,
எமது பிரச்சினையில் தொடர்ச்சியாக அக்கறை காட்டிவந்த தேசிய ஐக்கிய
முன்னணியின் தலைவர் அஸாத் சாலி மற்றும் முஜிபுர்ரஹ்மான் எம் பி ஆகியோரும்
பங்கேற்றிருந்தனர்.
புவியியல்
துறைப் பேராசிரியர் கலாநிதி நௌபல் வரைபடம் மூலம் நடந்த விடயங்களை உயர்
மட்ட அதிகாரிகளிடம் விளக்கியதை அடுத்து அவர்களும் பிழை நடந்திருப்பதை
ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னரே 3 நாட்களுக்குள் இந்தப் பிரச்சினைக்கு
தீர்வுபெற்றுத் தருவதாக ஜனாதிபதியின் செயலாளர் வாக்குறுதியளித்திருந்தார்.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் தாங்களும் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து
கால அவகாசம் கேட்டு இன்று 27 ஆம் திகதி அழைத்து வருவதாக அழைத்திருந்தனர்.
முஸ்லிம்
காங்கிரஸின் இந்த நடவடிக்கையினால் தான் நாங்கள் தொடர்ந்தும் இவ்வாறான
போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சீரழிவு ஏற்பட்டிருப்பதை கவலையுடன்
தெரிவிக்கின்றோம்.
கொழும்பில் நடந்த கூட்டத்தில்
பேராசிரியர் நௌபல் வில்பத்து தொடர்பான விவரணங்களையும் ஆவணங்களையும் மிகத்
தெளிவான முறையில் உயர் அதிகாரிகளிடம் விளக்கியதன் பின்னர் மு கா தலைவர்
முசலியில் மீண்டுமொரு நாடகத்தை அரங்கேற்றியதன் நோக்கம் தான் என்ன? அதுவும்
கொழும்பில் இது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரமுடைய அத்தனை துறைகளையும்
சார்ந்த மேல்மட்ட அதிகாரிகளுக்கு உண்மையான நிலையை ஆதாரங்களுடன் எடுத்துச்
சொன்ன பின்னர் முசலிக்கு வந்து முஸ்லிம் காங்ரஸ் தலைவர் புதிதாக வில்பத்து
அறிமுகக் கூட்டம் நடத்துவதன் மர்மம் தான் என்ன? இதில் வேதனை என்னவென்றால்
இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தப் பிரச்சினையுடன் தொடர்புடைய கீழ் மட்ட
அதிகாரிகளை வைத்தே, சூரா கவுன்சிலில் அங்கம் வகிக்கும் பேராசிரியர்கள்
இருவரை அழைத்து வந்து இந்த விவரணப் படத்தை போட்டுக்காட்டினார்.
இழந்த
மண்ணை மீட்பதற்காக மறிச்சுக்கட்டியில் நாங்கள் இத்தனை நாட்களாக போராடி
வருகின்றோம். இலங்கையின் பல பாகத்தில் இருந்தும் எமக்கு ஆதரவு தெரிவித்து
தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி மனித நேயம் கொண்டவர்கள் இங்கு
வருகின்றனர். கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் காங்கிரஸ்,
ஐக்கிய தேசிய கட்சி, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்,
பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நல்லாட்சிக்கான தேசியம் முன்னணி, மலையக
அமைப்புக்கள், பல்வேறு சமூக நல இயக்கங்கள், ஊடக அமைப்புக்கள், என்று அத்தனை
சாராரும் இங்கு வந்து எமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், தெரிவித்து
வருகின்றனர். மன்னார் ஆயர் உட்பட சர்வமதத்தலைவர்கள் இங்கு வந்து எமது
போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருந்துள்ளனர்.
ஆனால்
முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சல்மானைத் தவிர வேறு எவரும்
இந்தப் பக்கம் வரவுமில்லை. எமது பிரச்சினைகளை கேட்கவுமில்லை. இன்று
முசலியில் அந்தக் கட்சியின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள்
வில்பத்துத் தொடர்பில் பேராசிரியரின் விளக்கத்தைக் கேட்ட பின்னரே இந்த
பிரச்சினை தொடர்பில் தெரிந்திருப்பர்கள் என நாம் கருதுகின்றோம். உண்மையில்
முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகள் எமக்கு வேதனை தருகின்றது. சமூகப்
பிரச்சினையொன்றில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றார்கள் என்றே இன்றைய
சம்பவம் வெளிப்படுத்துகின்றது.
இதனாலாயே தான் இன்றைய நாளை முசலி மக்களின் கரி நாள் என்று கூறி நாம் வெளியேறினோம். கொழும்பில்
இருந்து வந்த மு கா தலைவர் இவ்வளவு தூரம் வந்த பின்னர் மறிச்சுக்கட்டிக்கு
வந்து மரிச்சுக்கட்டிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடும் நிலத்தை
பறிகொடுத்து வேதனையில் இருக்கும் எங்களை என்னவென்று கேட்கவுமில்லை, இது
தான் அவர்கள் எம்மீது கொண்டுள்ள கரிசனை என்பது தெளிவாக
விளங்குகின்றதல்லவா?
ஜனாதிபதியின்
செயலாளரை அழைத்து வந்து வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்ய நடவடிக்கை
எடுப்பதாகக் கூறிய மு கா தலைவர் ஹக்கீம் எம்மை ஏமாற்றி விட்டார்.
எங்களைப்
பொறுத்த வரையில் அரசாங்கம் வர்த்தமனி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும்
அல்லது வில்பத்து தொடர்பாக சுயாதீன ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி நிறுவி இந்தப்
பிரச்சினைக்கு தீர்வு தர வேண்டும். இதுவே எமது கோரிக்கையாகும்.
நல்லாட்சியைக்
கொண்டுவந்ததில் முழுமையான பங்களிப்பை வழங்கிய முசலி மக்களாகிய எமது
வாழ்வுரிமையை தடைசெய்ய வேண்டாமென நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் மிகவும்
உருக்கமாக வேண்டுகின்றோம்.
பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாகவும் போராட்ட ஏற்பாட்டுக்குழு சார்பாகவும்,
ஆசிரியர் சுபியான்.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்.