(எம்.ஜே.எம்.சஜீத்)
அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று ஊர்க்கரை வாய்க்காலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள தடைகளையும் நீக்கி அக்கரைப்பற்று நரிப்பிட்டி வடிச்சலுடன் இணைக்கும் பொருட்டு உயர்மட்ட குழுவொன்று நேற்று (15) அப்பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டனர்.
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் அமைந்துள்ள ஊர்க்கரை வாய்க்கால் தொடர்பு படுத்தப்படாமல் இருப்பதனால் மழை காலங்களில் இரு பிரதேசங்களும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பிரதேச மக்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களில் விரிவாக ஆராயப்பட்டு மேற்குறித்த வாய்க்காலினை நேரடியாக பார்வையிட்டு தீர்வொன்றினை மேற்கொள்வதற்காக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
மேற்படி உயர்மட்ட குழு நேற்று (15) அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் அமைந்துள்ள ஊர்க்கரை வாய்க்காலினை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அதன் பின்னர் அதுதொடர்பில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் விசேட கூட்டமொன்றும் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
முதலாம் கட்டமாக தொழிநுட்பக் கல்லூரி சந்தியிலிருந்து நெரிப்பிட்டி பாலம் வரை வாய்க்காலினை சுத்தப்படுத்துதல், குறித்த வாய்க்காலினை சுத்தப்படுத்தும் பணியினை நீர்ப்பாசன திணைக்களமும், அக்கரைப்பற்று மாநகர சபையும் இணைந்து மேற்கொள்ளுதல்.
இரண்டாம் கட்டமாக ஊர்க்கரை வாய்க்காலினை அட்டாளைச்சேனையில் இருந்து அக்கரைப்பற்று தொழிநுட்பக் கல்லூரி சந்தி வரை சுத்தப்படுத்தி அதிலுள்ள தடைகளையும் நீக்குதல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ் உயர்மட்டக் குழுவில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லத்தீப், அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், அக்கரைப்பற்று பிரந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ஐ.மயூரன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்எம்.ஜெமீல், அக்கரைப்பற்று மாநகர சபை பொறியியலாளர் எம்.பீ.எம்.மஜீட், கமலநல சேவை விரிவாக்கல் உத்தியோகத்தர்களான ஏ.எல்.அஷ்ரப், .அமீர் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.