GMOAஇன் பணிப் பகிஷ்கரிப்பினை மிக காட்டமாக எதிர்க்க மக்களை அழைக்கின்ற பணி! எம்.ஏ. அன்ஸில்

இங்கு எந்தக் குழப்பமும் இல்லை; அரசியலுக்கான எவ்வித தேவையும் இல்லை.


மக்கள் வஞ்சிக்கப்படும் போது அதற்கெதிராக கிழந்தெழுவதென்பது எமது இரத்தத்தில் கலந்த உணர்வு. இது அக்கரைப்பற்று வைத்திய அத்தியட்சகர் Dr. ஜவாஹிரை ஆதரிக்கின்ற விடயமல்ல. மாறாக, மனிதாபிமானமற்ற GMOAஇன் பணிப் பகிஷ்கரிப்பினை மிக காட்டமாக எதிர்க்க மக்களை அழைக்கின்ற பணி என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான சட்டத்தரணி. எம்.ஏ. அன்ஸில் தெரிவித்துள்ளார்,

அக்கரைப்பற்று வைத்தியசாலையில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலும் வைத்தியர்களின் போராட்டங்களுக்கு எதிராக தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,


16 வருடங்கள் வைத்தியசாலைகளில் கடமையாற்றியிருக்கிறேன். இந்தப் பணிப் பகிஷ்கரிப்பின் பின்புலத்தை புரிந்து கொள்ளும் அனுபவம் எனக்கும் இருக்கிறது. தொடர்தேச்சையாக ஒரு அநியாயம் நடந்து வருகிறது.

அதுவும், மக்களின் வரிப் பணத்தைக்கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மருத்துவ சேவையினைப் பெறும் ஏழை மக்களின் அடிப்படை உரிமை, அந்த மக்களின் வரிப் பணத்திலே கற்று, அந்த வரிப் பணத்திலே ஊதியம் பெறுகிற வைத்தியர்களாளேயே அவர்களின் நியாயமற்ற அல்லது சிறு கோரிக்கைகளை அடைந்து கொள்ளும் நோக்கில் மறுக்கப்படுகிறது.

நோயாளிகளை பகடைக்காய்களாக ஆக்கி பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தவிர, எங்களது கோரிக்கைகளை அடைந்து கொள்ள எமக்கு வேறு என்ன வழி இருக்கிறது என்று என்னிடமே அவர்களது சங்கத்தின் நிர்வாகி ஒருவர் நேரடியாக கேட்டார்.

கண்ணியமான மருத்தவ சேவையும், கண்ணியமானவர்களாக மதிக்கப்பட வேண்டிய மருத்துவர்களும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) என்ற மனிதாபிமானமற்ற கோர முகத்தினால் மதிப்பிழந்து நிற்பதே யதார்த்தம்.

எத்தனையோ மனிதாபிமானமுள்ள, நேர்மையான, அர்ப்பணிப்பு மிகுந்த வைத்தியர்களும் இந்த சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்குள் சிக்குண்டு பொத்தாம் பொதுவாக நோக்கப்படுவது நமக்கும் கவலைதான்.

இந்த சங்கத்தின் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து வெளியில் வருவது அல்லது மனிதநேயமற்ற இவ்வாறான பணிப் பகிஷ்கரிப்புகளுக்கெதிராக உள்ளிருந்து போராடுவதே, தங்களின் கண்ணியத்தை பாதுகாப்பதற்கு அவர்களுக்குள்ள வழி.

ஒரு முஸ்லிமாக நடக்கின்ற இந்த அநியாயத்தை, கரத்தினால் தடுக்க வேண்டும்; முடியாவிட்டால் நாவினால் தடுக்க வேண்டும்; அதுவும் முடியாவிட்டால் மனதால் வெறுத்து ஒதுங்க வேண்டும் என்பது நமது மார்க்கத்தின் கட்டளை.

என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். எனது உள்ளத்தை அறிந்த அழ்ழாஹ் மாத்திரமே எனக்கு கூலி தருபவன். எனக்கான நலவையும் கெடுதியையும் தீர்மானிப்பவன் அவனே. வேறு எவரிடமிருந்தும் நற்சாண்றுப் பத்திரம் எனக்குத் தேவையில்லை. என்றார் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்